Saturday, October 27, 2007

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-ஆசாரக்கோவை

My other blogs
http:// pathupattu.blogspot.com
http:// ettuthogai.blogspot.com
http:// kizhkanakku.blogspot.com
http:// thirumalpur.blogspot.com














கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை
ஆசாரக்கோவை என்பதற்கு 'ஆசாரங்களினது கோவை' என்றோ, 'ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். 'ஆசார வித்து' (1) என்று தொடங்கி, 'ஆசாரம் வீடு பெற்றார்' (100) என முடியும் நூறு செய்யுட்களில் தாம் கூறப் புகுந்த ஆசாரங்களை ஒரு நெறிப்பட ஆசிரியர் கோவை செய்துள்ளார். பொது வகையான ஒழுக்கங்களைத் தொகுத்தது தவிர நாள்தோறும் வாழ்க்கையில் பின்பற்றி நடக்க வேண்டும் கடமைகள் அல்லது நித்திய ஒழுக்கங்களையும் மிகுதியாக ஆசிரியர் தந்துள்ளார். அகத்தூய்மை அளிக்கும் அறங்களோடு உடல் நலம் பேணும் புறத்தூய்மையை வற்புறுத்திக் கூறும் பகுதிகளும் அதிகம் காணப்படுகின்றன. இந் நூல் வடமொழி ஸ்மிருதிக் கருத்துக்களைப் பின்பற்றி எழுந்தது என்பது,

ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான்


எனவரும் சிறப்புப் பாயிரச் செய்யுள் மூலம் தெரியவருகிறது.
இந் நூலின் ஆசிரியரையும், இவர்தம் தந்தையார் பெயரையும், இவர் வாழ்ந்த ஊரையும், இவரது மதச் சார்பையும் சிறப்புப் பாயிரச் செய்யுள் நமக்கு அறிவிக்கின்றது. இவரது முழுப்பெயர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் என்பதாகும். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். பெருவாய் என்பது இவரது தந்தையார் பெயர் போலும்! கயத்தூரின் ஒரு பகுதியாகிய பெருவாயிலில் வாழ்ந்தவர் என்றோ, கயத்தூரை அடுத்த பெருவாயிலில் வாழ்ந்தவர் என்றோ என்னவும் இடமுண்டு. இவர் வாழ்ந்த ஊர் கயத்தூர். இவ் ஊரைத் 'திரு வாயில் ஆய திறல் வண கயத்தூர்' என்று பாயிரப் பாடல் சிறப்பிக்கின்றது. இது கொண்டு செல்வமும், திறலும், வண்மையும் ஓங்கிய ஊர் இது என்பது விளங்கும். இவ் ஊர் எங்குள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 'ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி' என்பதனால், இவர் சைவ சமயத்தார் என்பதும் போதரும். இந்நூலில் சிறப்புப் பாயிரம் நீங்கலாக 100 செய்யுட்கள் உள்ளன. வெண்பாவின் வகையாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, சவலை வெண்பா, என்பன இதில் உள்ளன.


ஆசார வித்து
(பஃறொடை வெண்பா)
நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு,
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு,
ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை,
நல் இனத்தாரோடு நட்டல், - இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து. 1


ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
(இன்னிசை வெண்பா)
பிறப்பு, நெடு வாழ்க்கை, செல்வம், வனப்பு,
நிலக் கிழமை, மீக்கூற்றம், கல்வி, நோய் இன்மை,
இலக்கணத்தால், இவ் வெட்டும் எய்துப - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். 2


தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா கெடும். 3


முந்தையோர் கண்ட நெறி
(இன்னிசை வெண்பா)
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை. 4


எச்சிலுடன் தீண்டத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'எச்சிலார், தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். 5


எச்சிலுடன் காணக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சிலார், நோக்கார் - புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து. 6


எச்சில்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. 7


எச்சிலுடன் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நால் வகை எச்சிலும் நன்கு கடைப்பிடித்து,
ஓதார், உரையார், வளராரே, - எஞ் ஞான்றும்
மேதைகள் ஆகுறுவார். 8


காலையில் கடவுளை வணங்குக!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி. 9


நீராட வேண்டிய சமயங்கள்
(பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்! 10

பழைமையோர் கண்ட முறைமை
(இன்னிசை வெண்பா)
உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; - என்பதே
முந்தையோர் கண்ட முறை. 11


செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து. 12


செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை. 13


நீராடும் முறை
(இன்னிசை வெண்பா)
நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,-
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர். 14


உடலைப் போல் போற்றத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு,
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும். 15


யாவரும் கூறிய நெறி
(சவலை வெண்பா)
'அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுது எழுக!' என்பதே-
யாவரும் கண்ட நெறி. 16


நல்லறிவாளர் செயல்
(இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்' என்பதே-
நல் அறிவாளர் துணிவு. 17


உணவு உண்ணும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலம்செய்து,
உண்டாரே உண்டார் எனப்படுவார்; அல்லாதார்
உண்டார்போல் வாய்பூசிச் செல்வர்; அது எடுத்துக்
கொண்டார் அரக்கர், குறித்து. 18


கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
காலின் நீர் நீங்காமை உண்டிடுக! பள்ளியும்
ஈரம் புலராமை எறற்க!' என்பதே-
பேர் அறிவாளர் துணிவு. 19


உண்ணும் விதம்
(இன்னிசை வெண்பா)
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து,
தூங்கான், துளங்காமை, நன்கு இரீஇ, யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான், உரையான், தொழுது கொண்டு,
உண்க, உகாஅமை நன்கு! 20


ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
விருந்தினர், மூத்தோர், பசு, சிறை, பிள்ளை,
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே - என்றும்
ஒழுக்கம் பிழையாதவர். 21


பிற திசையும் நல்ல
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல;
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார்; இகழ்ந்தார்,
முகட்டு வழி கட்டில் பாடு. 22

உண்ணக் கூடாத முறைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று! 23


பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முன் துவ்வார்; முன் எழார்; மிக்கு உறார்; ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார்; - தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால். 24


கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கைப்பன எல்லாம் கடை, தலை தித்திப்ப,
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக,
துய்க்க, முறை வகையால், ஊண். 25


உண்ணும்கலம்
(இன்னிசை வெண்பா)
முதியவரைப் பக்கத்து வையார்; விதி முறையால்
உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து,
அன்பின் திரியாமை, ஆசாரம் நீங்காமை,
பண்பினால் நீக்கல், கலம்! 26


உண்டபின் செய்ய வேண்டியவை
(பஃறொடை வெண்பா)
இழியாமை நன்கு உமிழ்ந்து, எச்சில் அற வாய்
அடியோடு நன்கு துடைத்து, வடிவு உடைத்தா
முக் கால் குடித்துத் துடைத்து, முகத்து உறுப்பு
ஒத்த வகையால் விரல் உறுத்தி, வாய்பூசல் -
மிக்கவர் கண்ட நெறி. 27


நீர் குடிக்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இரு கையால் தண்ணீர் பருகார்; ஒரு கையால்,
கொள்ளார், கொடாஅர், குரவர்க்கு; இரு கை
சொறியார், உடம்பு மடுத்து. 28


மாலையில் செய்யக் கூடியவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
அந்திப் பொழுது, கிடவார், நடவாரே;
உண்ணார், வெகுளார், விளக்கு இகழார்; முன் அந்தி
அல்கு உண்டு அடங்கல் வழி. 29


உறங்கும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடக்குங்கால், கை கூப்பித் தெய்வம் தொழுது,
வடக்கொடு கோணம் தலை வையார்; மீக்கோள்
உடல் கொடுத்து, சேர்தல் வழி. 30



இடையில் செல்லாமை முதலியன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இரு தேவர், பார்ப்பார், இடை போகார்; தும்மினும்,
மிக்கார் வழுத்தின், தொழுது எழுக! ஒப்பார்க்கு
உடன் செல்க, உள்ளம் உவந்து! 31


மலம், சிறுநீர் கழிக்கக் கூடாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)
புல், பைங்கூழ், ஆப்பி, சுடலை, வழி, தீர்த்தம்,
தேவகுலம், நிழல், ஆன் நிலை, வெண்பலி, என்று
ஈர்-ஐந்தின்கண்ணும், உமிழ்வோடு இரு புலனும்
சோரார்-உணர்வு உடையார். 32


மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(குறள் வெண்பா)
பகல் தெற்கு நோக்கார்; இரா வடக்கு நோக்கார்;
பகல் பெய்யார், தீயினுள் நீர். 33


மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(இன்னிசை வெண்பா)
பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின்,
அந்தரத்து அல்லால், உமிவோடு இரு புலனும்,
இந்திர தானம் பெறினும், இகழாரே-
'தந்திரத்து வாழ்தும்!' என்பார். 34


வாய் அலம்ப ஆகாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)
நடைவரவு, நீரகத்து நின்று, வாய்பூசார்;
வழி நிலை, நீருள்ளும் பூசார்; மனத்தால்
வரைந்து கொண்டு அல்லது பூசார், கலத்தினால்
பெய் பூச்சுச் சீராது எனின். 35


ஒழுக்கமற்றவை
(பஃறொடை வெண்பா)
சுடர் இடைப் போகார்; சுவர்மேல் உமியார்;
இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்;
படை வரினும், ஆடை வளி உரைப்பப் போகார்;
பலர் இடை ஆடை உதிராரே; - என்றும்
கடன் அறி காட்சியவர். 36


நரகத்துக்குச் செலுத்துவன
(நேரிசை வெண்பா)
பிறர் மனை, கள், களவு, சூது, கொலையோடு,
அறன் அறிந்தார், இவ் ஐந்தும் நோக்கார் - திறன் இலர் என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி, நிரயத்துச்
செல்வுழி உய்த்திடுதலான். 37


எண்ணக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்; சிந்திப்பின்,
ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்;
தெய்வமும் செற்றுவிடும். 38


தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்! 39


சான்றோர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உயர்ந்ததின் மேல் இரார்; - உள் அழிவு செய்யார்,
இறந்து இன்னா செய்தக்கடைத்தும்; - குரவர்,
இளங் கிளைகள் உண்ணும் இடத்து. 40


சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கண் எச்சில் கண் ஊட்டார்; காலொடு கால் தேயார்;
புண்ணிய ஆய தலையோடு உறுப்பு உறுத்த! -
நுண்ணிய நூல் உணர்வினார். 41


மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின்,
ஈர்-ஆறு நாளும் இகவற்க!' என்பதே -
பேர் அறிவாளர் துணிவு. 42


உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
உச்சிஅம் போழ்தோடு, இடை யாமம், ஈர்-அந்தி,
மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள்,
அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும்
ஒட்டார்-உடன் உறைவின்கண். 43


நாழி முதலியவற்றை வைக்கும் முறை
(இன்னிசை வெண்பா)
நாழி மணைமேல் இரியார்; மணை கவிழார்;
கோடி கடையுள் விரியார்; கடைத்தலை,
ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்-
தம் தலைக்கண் நில்லாவிடல்! 44


பந்தலில் வைக்கத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துடைப்பம், துகட் காடு, புல் இதழ், செத்தல்
கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு, ஐந்தும்,
பரப்பற்க, பந்தரகத்து! 45


வீட்டைப் பேணும்முறைமை
(பஃறொடை வெண்பா)
காட்டுக் களைந்து கலம் கழீஇ, இல்லத்தை
ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை,
நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து,
இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க-
நல்லது உறல் வேண்டுவார்! 46


நூல் ஓதுதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும்,
அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க
நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை, - பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள். 47


அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கலியாணம், தேவர், பிதிர் விழா, வேள்வி, என்று
ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க!
பெய்க, விருந்திற்கும் கூழ்! 48


நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும் -
நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும் தத்தம்
குடிமைக்கும், தக்க செயல்! 49


கேள்வியுடையவர் செயல்
(இன்னிசை வெண்பா)
பழியார்; இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி,
இல்லாரை எள்ளி, இகந்து உரையார்; - தள்ளியும்,
தாங்க அருங் கேள்வியவர். 50

தம் உடல் ஒளி விரும்புபவர் செய்யத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும்,
தம் ஒளி வேண்டுவார் நோக்கார்; பகற் கிழவோன்
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று. 51


தளராத உள்ளத்தவர் செயல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும், உரையாரே - என்றும்
அசையாத உள்ளத்தவர். 52


ஒழுக்கமுடையவர் செய்யாதவை
(இன்னிசை வெண்பா)
தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே,
விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
பயிற்றார் - நெறிப்பட்டவர். 53


விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை, கால், நீர், மணை, பாய்,
கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப - தலைச் சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு. 54


அறிஞர் விரும்பாத இடங்கள்
(பஃறொடை வெண்பா)
கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும்
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்,
குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும், -
நிகர் இல் அறிவினார் வேண்டார் - பலர் தொகு
நீர்க்கரையும், நீடு நிலை. 55


தவிர்வன சில
(பஃறொடை வெண்பா)
முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்;
துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக்
கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி,
நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே,
தொல் வரவின் தீர்ந்த தொழில். 56


நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பாழ் மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்; -
நோய் இன்மை வேண்டுபவர். 57


ஒருவர் புறப்படும்போது செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
எழுச்சிக்கண், பின் கூவார், தும்மார்; வழுக்கியும்,
எங்கு உற்றுச் சேறிரோ?' என்னாரே; முன் புக்கு,
எதிர் முகமா நின்றும் உரையார்; இரு சார்வும்;
கொள்வர், குரவர் வலம். 58


சில தீய ஒழுக்கங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'உடம்பு நன்று!' என்று உரையார்; ஊதார், விளக்கும்;
அடுப்பினுள் தீ நந்தக் கொள்ளார்; அதனைப்
படக் காயார், தம்மேல் குறித்து. 59


சான்றோருடன் செல்லும் போது செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
யாதொன்றும், ஏறார், செருப்பு; வெயில் மறையார்; -
ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு
ஓர் ஆறு செல்லும் இடத்து. 60


நூல்முறை உணர்ந்தவர் துணிவு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வால் முறையான் வந்த நான் மறையாளரை
மேல் முறைப் பால் தம் குரவரைப்போல் ஒழுகல் -
நூல் முறையாளர் துணிவு. 61


சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு,
ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை
சாரத்தால் சொல்லிய மூன்று. 62


கற்றவர் கண்ட நெறி
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துறந்தாரைப் பேணலும், நாணலும், தாம் கற்ற
மறந்தும் குரவர் முன் சொல்லாமை, மூன்றும்,
திறம் கண்டார் கண்ட நெறி. 63


வாழக்கடவர் எனப்படுபவர்
(இன்னிசை வெண்பா)
பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார்,
மூத்தார், இளையார், பசு, பெண்டிர், என்று இவர்கட்கு
ஆற்ற வழி விலங்கினாரே - பிறப்பினுள்
போற்றி எனப்படுவார். 64


தனித்திருக்கக் கூடாதவர்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஈன்றாள், மகள், தன் உடன்பிறந்தாள், ஆயினும்,
சான்றார் தமித்தா உறையற்க - ஐம் புலனும்
தாங்கற்கு அரிது ஆகலான்! 65


மன்னருடன் பழகும் முறை
(இன்னிசை வெண்பா)
கடை விலக்கின், காயார்; கழி கிழமை செய்யார்;
கொடை அளிக்கண் பொச்சாவார்; கோலம் நேர் செய்யார்;
இடை அறுத்துப் போகி, பிறன் ஒருவற் சேரார்; -
'கடைபோக வாழ்தும்!' என்பார். 66


குற்றம் ஆவன
(இன்னிசை வெண்பா)
தமக்கு உற்ற கட்டுரையும், தம்மில் பெரியார்
உரைத்ததற்கு உற்ற உரையும், அஃது அன்றிப்
பிறர்க்கு உற்ற கட்டுரையும், சொல்லற்க! சொல்லின்,
வடுக் குற்றம் ஆகிவிடும். 67


நல்ல நெறி
(இன்னிசை வெண்பா)
பெரியார் உவப்பன தாம் உவவார்; இல்லம்
சிறியாரைக் கொண்டு புகாஅர்; அறிவு அறியாப்
பிள்ளையேயானும் இழித்து உரையார், தம்மோடு
அளவளாவு இல்லா இடத்து. 68


மன்னர் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
(இன்னிசை வெண்பா)
முனியார்; துனியார்; முகத்து எதிர் நில்லார்;
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார்;
'இனியவை யாம் அறிதும்!' என்னார்; கசிவு இன்று,
காக்கை வெள்ளென்னும் எனின். 69


மன்னன் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உமிவும், உயர்ந்துழி ஏறலும், பாக்கும்,
வகைஇல் உரையும், வளர்ச்சியும், ஐந்தும்
புணரார் - பெரியாரகத்து. 70


மன்னன் முன் சொல்லக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
இறைவர் முன், செல்வமும், கல்வியும், தேசும்,
குணனும், குலம் உடையார் கூறார் - பகைவர்போல்
பாரித்து, பல் கால் பயின்று. 71


வணங்கக்கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பெரியார் மனையகத்தும் தேவகுலத்தும்,-
வணங்கார் - குரவரையும் கண்டால்; அணங்கொடு
நேர் பெரியார் செல்லும் இடத்து. 72


மன்னர் முன் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
நகையொடு, கொட்டாவி, காறிப்பு, தும்மல்,
இவையும் பெரியார் முன் செய்யாரே; செய்யின்,
அசையாது, நிற்கும் பழி. 73


ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
(இன்னிசை வெண்பா)
நின்றக்கால், நிற்க, அடக்கத்தால்! என்றும்
இருந்தக்கால், ஏவாமை ஏகார்; பெருந்தக்கார்
சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக! மீட்டும்
வினாவற்க, சொல் ஒழிந்தக்கால்! 74


சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உடுக்கை இகவார், செவி சொறண்டார்; கை மேல்-
எடுத்து உரையார்; பெண்டிர்மேல் நோக்கார்; செவிச் சொல்லும்
கொள்ளார்; பெரியார் அகத்து. 75


சொல்லும் முறைமை
(இன்னிசை வெண்பா)
விரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய
பரந்து உரையார்; பாரித்து உரையார்; - ஒருங்கு எனைத்தும்
சில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால்
சொல்லுக, செவ்வி அறிந்து! 76


நல்ல குலப்பெண்டிர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தம் மேனி நோக்கார்; தலை உளரார்; கைந் நொடியார்,
எம் மேனி ஆயினும் நோக்கார்; தலைமகன்-
தம் மேனி அல்லால் பிற. 77


மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
பிறரொடு மந்திரம் கொள்ளார்; இறைவனைச்
சாரார்; செவி ஓரார்; சாரின், பிறிது ஒன்று
தேர்வார்போல் நிற்க, திரிந்து! 78


பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
(நேரிசை வெண்பா)
துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும், அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமை, - இம் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள. 79


சான்றோர் பெயர் முதலியவற்றை கூறாமை
(நேரிசை வெண்பா)
தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார்; இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர்; பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார்; புலையரையும்
நன்கு அறிவார் கூறார், முறை. 80



ஆன்றோர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை,
இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத்
தொழிற்கு உரியர் அல்லாதவர். 81


மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம்,
ஒள்ளியம் என்பார், இடம் கொள்ளார்; தெள்ளி,
மிகக் கிழமை உண்டுஎனினும், வேண்டாவே; - பெண்டிர்க்கு
உவப்பன வேறாய்விடும். 82


கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
(இன்னிசை வெண்பா)
நிரல்படச் செல்லார்; நிழல் மிதித்து நில்லார்;
உரையிடை ஆய்ந்து உரையார், ஊர் முனிவ செய்யார்;
அரசர் படை அளவும் சொல்லாரே; - என்றும்,
'கடைபோக வாழ்தும்!' என்பார். 83


பழகியவை என இகழத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
அளை உறை பாம்பும், அரசும், நெருப்பும்,
முழை உறை சீயமும், என்று இவை நான்கும்,
இளைய, எளிய, பயின்றன, என்று எண்ணி,
இகழின், இழுக்கம் தரும். 84


செல்வம் கெடும் வழி
(நேரிசை வெண்பா)
அறத்தொடு, கல்யாணம், ஆள்வினை, கூரை,
இறப்பப் பெருகியக்கண்ணும், திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க! செய்பவேல்,
மன்னிய செல்வம் கெடும். 85


பெரியவரை 'உண்டது யாது' என வினவக் கூடாது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உண்டது கேளார், குரவரை, மிக்காரை,
கண்டுழி; கண்டால், முகம் திரியார், புல்லரையும்
உண்டது கேளார் விடல்! 86


கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
கிடந்தாரைக் கால் கழுவார்; பூப்பெய்யார்; சாந்தம்
மறந்தானும் எஞ் ஞான்றும் பூசார்; கிடந்தார்கண்
நில்லார், தாம் - கட்டில்மிசை. 87

பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உதவிப் பயன் உரையார்; உண்டி பழியார்;
அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார்; -
'திறத்துளி வாழ்தும்!' என்பார். 88


கிடைக்காதவற்றை விரும்பாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
எய்தாத வேண்டார்; இரங்கார், இழந்ததற்கு,
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்; -
மெய்யாய காட்சியவர். 89


தலையில் சூடிய மோத்தல் முதலானவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தலைக்கு இட்ட பூ மேவார்; மோந்த பூச்சூடார்;
பசுக் கொடுப்பின், பார்ப்பார் கைக் கொள்ளாரே; என்றும்,
புலைக்கு எச்சில் நீட்டார்; விடல்! 90



பழியாவன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மோட்டுடைப் போர்வையோடு, ஏக்கழுத்தும், தாள் இசைப்பு,
காட்டுளேயானும், பழித்தார் - மரம் தம்மின்
மூத்த உள, ஆகலான். 91


அந்தணரின் சொல்லைக் கேட்க!
(நேரிசை வெண்பா)
தலைஇய நற் கருமம் செய்யுங்கால், என்றும்,
புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார்; தொலைவு இல்லா
அந்தணர்வாய் நாள் கேட்டுச் செய்க - அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்பது இல! 92


சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மன்றத்து நின்று உஞற்றார்; மாசு திமிர்ந்து இயங்கார்;
என்றும் கடுஞ் சொல் உரையார்; இருவராய்
நின்றுழியும் செல்லார்; - விடல்! 93


ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
(இன்னிசை வெண்பா)
கை சுட்டிக் கட்டுரையார்; கால்மேல் எழுத்து இடார்,
மெய் சுட்டி, இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார்;
கையில் குரவர் கொடுப்ப, இருந்து ஏலார்; -
ஐயம் இல் காட்சியவர். 94


பொன்னைப் போல் காக்கத் தக்கவை
(இன்னிசை வெண்பா)
தன் உடம்பு, தாரம், அடைக்கலம், தன் உயிர்க்கு என்று
உன்னித்து வைத்த பொருளோடு, இவை நான்கும்,
பொன்னினைப்போல் போற்றிக் காத்து உய்க்க! உய்க்காக்கால்,
மன்னிய ஏதம் தரும். 95


எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
(இன்னிசை வெண்பா)
நந்து எறும்பு, தூக்கணம்புள், காக்கை, என்று இவைபோல்,
தம் கருமம் நல்ல கடைப்பிடித்து, தம் கருமம்
அப் பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப் பெற்றியானும் படும். 96


சான்றோர் முன் சொல்லும் முறை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
தொழுதானும், வாய் புதைத்தானும், அஃது அன்றி,
பெரியார்முன் யாதும் உரையார்; பழி அவர்-
கண்ணுளே நோக்கி உரை! 97


புகக் கூடாத இடங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
சூதர் கழகம், அரவர் அறாக் களம்,
பேதைகள் அல்லார் புகாஅர்; புகுபவேல்,
ஏதம் பலவும் தரும். 98


அறிவினர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
உரற் களத்தும், அட்டிலும், பெண்டிர்கள் மேலும், -
நடுக்கு அற்ற காட்சியார் - நோக்கார், எடுத்து இசையார்,
இல்லம் புகாஅர்; விடல்! 99


ஒழுக்கத்தினின்று விலகியவர்
(பஃறொடை வெண்பா)
அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான்,
இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான்,
அரசர் தொழில் தலைவைத்தான், மணாளன், என்று
ஒன்பதின்மர் கண்டீர் - உரைக்குங்கால் மெய்யான்
ஆசாரம் வீடு பெற்றார். 100


சிறப்புப் பாயிரம்
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி,
ஆரிடத்துத் தான் அறிந்த மாத்திரையான், ஆசாரம்
யாரும் அறிய, அறன் ஆய மற்றவற்றை
ஆசாரக்கோவை எனத் தொகுத்தான் - தீராத்
திரு வாயில் ஆய, திறல் வண், கயத்தூர்ப்
பெருவாயின் முள்ளி என்பான்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- ஏலாதி

கணிமேதாவியார் இயற்றிய ஏலாதி
ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் 'ஏலாதி' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர். ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை நீர் மையால் இப் பெயரைப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். கணிமேதை என்றும் இவர் வழங்கப் பெறுவர். கணிமேதை என்பது கொண்டு சோதிட நூற் புலமை மிக்கார் இவர் என்று கொள்வாரும் உண்டு. நூலின் முதற்கண் அருகக் கடவுளுக்கு இவர் வாழ்த்துக் கூறியுள்ளமையினாலும், நூலுள் சமண சமயத்தின் சிறப்பு அறங்கள் சுட்டப் பெறுதலினாலும், இவரைச் சைன சமயத்தவர் என்று கொள்ளலாம்.
இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன. ஆறு பொருள்களை நான்கு அடிப் பாடலில் அடக்கும் இந் நூலில், மகடூஉ முன்னிலைகளைச் சிற்சில பாடல்களில் ஆசிரியர் மேற்கொள்ளுதல் பொருளை மேலும் குறுக்கிவிடுகிறது.



கடவுள் வாழ்த்து
அறு நால்வர் ஆய் புகழ்ச் சேவடி ஆற்றப்
பெறு நால்வர் பேணி வழங்கிப் பெறும் நான் -
மறை புரிந்து வாழுமேல், மண் ஒழிந்து, விண்ணோர்க்கு
இறை புரிந்து வாழ்தல் இயல்பு.
நூல்
சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்
அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
வழிவந்தார்கண்ணே வனப்பு. 1

கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த
அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,
மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!-
விண்ணவர்க்கும் மேலாய்விடும். 2

தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,
அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா
இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது. 3

இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை,
படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல்,
கண்டவர் காமுறும் சொல், - காணின், கலவியின்கண்
விண்டவர் நூல் வேண்டாவிடும். 4

தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்;
எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றை
போலும் இழையார் சொல் தேறான்; களியானேல்; -
சாலும், பிற நூலின் சார்பு. 5

நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே,
பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை,
வேய் அன்ன தோளாய்! - இவை உடையான் பல் உயிர்க்கும்
தாய் அன்னன் என்னத் தகும். 6

இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும்
வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல், -
முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்! - நாளும்
விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து. 7

உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்ந்து,
மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் பட
நோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல், - மற்று அவனை
யாக்குமவர் யாக்கும், அணைந்து. 8

கற்றாரைக் கற்றது உணரார் என மதியார்,
உற்றாரை அன்னணம் ஓராமல், அற்றார்கட்கு
உண்டி, உறையுள், உடுக்கை, இவை ஈந்தார் -
பண்டிதராய் வாழ்வார், பயின்று. 9

செங் கோலான், கீழ்க் குடிகள், செல்வமும்; சீர் இலா
வெங் கோலான், கீழ்க் குடிகள், வீந்து உகவும்; வெங் கோல்
அமைச்சர், தொழிலும், அறியலம் - ஒன்று ஆற்ற
எனைத்தும் அறியாமையான். 10

அவா அறுக்கல் உற்றான் தளரான்; அவ் ஐந்தின்
அவா அறுப்பின், ஆற்ற அமையும்; அவா அறான் -
ஆகும் அவனாயின், ஐங் களிற்றின் ஆட்டுண்டு,
போகும், புழையுள் புலந்து. 11

கொலைக் களம், வார் குத்து, சூது ஆடும் எல்லை,
அலைக் களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம்,
முச் சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும், - இன்னவை
நச்சாமை, நோக்காமை, நன்று. 12

விளையாமை, உண்ணாமை, ஆடாமை, ஆற்ற
உளையாமை, உட்குடைத்தா வேறல், களையாமை, -
நூல் பட்டு ஆர் பூங்கோதாய்! - நோக்கின், இவை ஆறும்
பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு. 13

பொய்யான், புலாலொடு கள் போக்கி, தீயன
செய்யான், சிறியார் இனம் சேரான், வையான், -
கயல் இயல் உண் கண்ணாய்! - கருதுங்கால், என்றும்
அயல, அயலவர் நூல். 14

கண் போல்வார்க் காயாமை; கற்றார், இனம் சேர்தல்;
பண் போல் கிளவியார்ப் பற்றாமை; பண் போலும்
சொல்லார்க்கு அரு மறை சோராமை; சிறிது எனினும்
இல்லார்க்கு இடர் தீர்த்தல், - நன்று. 15

துறந்தார்கண் துன்னி, துறவார்க்கு இடுதல்,
இறந்தார்க்கு இனிய இசைத்தல், இறந்தார்,
மறுதலை, சுற்றம், மதித்து ஓம்புவானேல்,
இறுதல் இல் வாழ்வே இனிது. 16 .

குடி ஓம்பல், வன்கண்மை, நூல் வன்மை, கூடம்,
மடி ஓம்பும், ஆற்றல் உடைமை, முடி ஓம்பி,
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல்
தேற்றானேல், தேறும் அமைச்சு. 17

போகம், பொருள் கேடு, மான் வேட்டம், பொல்லாக் கள்,
சோகம் படும் சூதே, சொல்வன்மை, சோகக்
கடுங் கதத்துத் தண்டம், அடங்காமை, காப்பின்,
அடும் கதம் இல், ஏனை அரசு. 18

கொல்லான், கொலை புரியான், பொய்யான், பிறர் பொருள்மேல்
செல்லான், சிறியார் இனம் சேரான், சொல்லும்
மறையில் செவி இலன், தீச் சொற்கண் மூங்கை, -
இறையில் பெரியாற்கு இவை. 19

மின் நேர் இடையார் சொல் தேறான், விழைவு ஓரான்,
கொன்னே வெகுளான், கொலை புரியான், - பொன்னே! -
உறுப்பு அறுத்தன்ன கொடை உவப்பான், தன்னின்
வெறுப்பு அறுத்தான், - விண்ணகத்தும் இல். 20

இளமை கழியும்; பிணி, மூப்பு, இயையும்;
வளமை, வலி, இவை வாடும்; உள நாளால்,
பாடே புரியாது, - பால் போலும் சொல்லினாய்!-
வீடே புரிதல் வீதி. 21

வாள் அஞ்சான், வன்கண்மை அஞ்சான், வனப்பு அஞ்சான்,
ஆள் அஞ்சான், ஆம் பொருள்தான் அஞ்சான்; நாள் எஞ்சாக்
காலன் வரவு ஒழிதல் காணின், வீடு எய்திய
பாவின் நூல் எய்தப்படும். 22

குணம் நோக்கான்; கூழ் நோக்கான்; கோலமும் நோக்கான்;
மணம் நோக்கான், மங்கலமும் நோக்கான்; கணம் நோக்கான்; -
கால் காப்பு வேண்டான், - பெரியார் நூல் காலற்கு
வாய் காப்புக் கோடல் வனப்பு. 23

பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம்,
தணிவு இல் நிரப்பு, இவை தாழா - அணியின்,
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம்
நிரம்புமேல், வீட்டு நெறி. 24

பாடு அகம் சாராமை; பாத்திலார்தாம் விழையும்
நாடகம் சாராமை; நாடுங்கால், நாடகம்
சேர்ந்தால், பகை, பழி, தீச்சொல்லே, சாக்காடே,
தீர்ந்தாற்போல் தீரா வரும். 25

மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே, வன்கண்மை,
ஆண்டு அமைந்த கல்வியே, சொல் ஆற்றல், பூண்டு அமைந்த
காலம் அறிதல், கருதுங்கால், - தூதுவர்க்கு
ஞாலம் அறிந்த புகழ். 26

அஃகு, நீ, செய்யல், எனஅறிந்து, ஆராய்ந்தும்,
வெஃகல், வெகுடலே, தீக் காட்சி, வெஃகுமான்,
கள்ளத்த அல்ல கருதின், இவை மூன்றும்
உள்ளத்த ஆக உணர்! 27

மை ஏர் தடங் கண் மயில் அன்ன சாயலாய்! -
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர்; - பொய்யே,
குறளை, கடுஞ் சொல், பயன் இல் சொல், நான்கும்
மறலையின் வாயினவாம், மற்று. 28

நிலை அளவின் நின்ற நெடியவர்தாம் நேரா,
கொலை, களவு, காமத் தீ வாழ்க்கை; அலை அளவி,
மை என நீள் கண்ணாய்! - மறுதலைய இம் மூன்றும்
மெய் அளவு ஆக விதி! 29

மாண்டவர் மாண்ட அறிவினால், மக்களைப்
பூண்டு அவர்ப் போற்றிப் புரக்குங்கால், - பூண்ட
ஒளரதனே, கேத்திரசன், கானீனன், கூடன்,
கிரிதன், பௌநற்பவன், பேர். 30

மத்த மயில் அன்ன சாயலாய்! மன்னிய சீர்த்
தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரி
புத்ரன் அபவித்தனொடு, பொய் இல் உருகிருதன்,
இத் திறத்த, - எஞ்சினார் பேர். 31

உரையான், குலன், குடிமை; ஊனம் பிறரை
உரையான்; பொருளொடு, வாழ்வு, ஆயு, உரையானாய், -
பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய்! - ஈத்து உண்பான்
தேவாதி தேவனாத் தேறு! 32

பொய் உரையான், வையான், புறங்கூறான் யாவரையும்,
மெய் உரையான், உள்ளனவும் விட்டு உரையான், எய் உரையான், -
கூந்தல் மயில் அன்னாய்! - குழீஇய வான் விண்ணோர்க்கு
வேந்தனாம் இவ் உலகம் விட்டு. 33

சிதை உரையான், செற்றம் உரையான், சீறு இல்லான்,
இயல்பு உரையான், ஈனம் உரையான், நசையவர்க்குக்
கூடுவது ஈவானை, - கொவ்வைபோல் செவ் வாயாய்! -
நாடுவர், விண்ணோர், நயந்து. 34

துறந்தார், துறவாதார், துப்பு இலார், தோன்றாது
இறந்தார், ஈடு அற்றார், இனையர், சிறந்தவர்க்கும், -
பண் ஆளும் சொல்லாய்! - பழி இல் ஊண் பாற்படுத்தான்,
மண் ஆளும், மன்னாய் மற்று. 35

கால் இல்லார், கண் இல்லார், நா இல்லார், யாரையும்
பால் இல்லார், பற்றிய நூல் இல்லார், சாலவும்
ஆழப் படும் ஊண் அமைத்தார், இமையவரால்
வீழப்படுவார், விரைந்து. 36

அழப் போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப் போகான், ஈடு அற்றார் என்றும் தொழப் போகான்,
என்னே, இக் காலன்! நீடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே இருத்தல் குறை. 37
எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி
வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால்,
நேராமை சால உணர்வார் பெருந் தவம்
போகாமை, சாலப் புலை. 38

சாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லது
மேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண்
சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய்
வேறல் எளிது; அரிது, சொல். 39

உலையாமை, உற்றதற்கு ஓடி உயிரை
அலையாமை ஐயப்படாமை, நிலையாமை
தீர்க்கும் வாய் தேர்ந்து, பசி உண்டி நீக்குவான்,
நோக்கும் வாய் விண்ணின் உயர்வு. 40
குறுகான், சிறியாரை; கொள்ளான், புலால்; பொய்
மறுகான்; பிறர் பொருள் வெளவான்; இறுகானாய்,
ஈடு அற்றவர்க்கு ஈவான் ஆயின், நெறி நூல்கள்
பாடு இறப்ப, பன்னும் இடத்து. 41

கொல்லான், உடன்படான், கொல்வார் இனம் சேரான்,
புல்லான் பிறர் பால், புலால் மயங்கல் செல்லான்,
குடிப் படுத்துக் கூழ் ஈந்தான், - கொல் யானை ஏறி
அடிப் படுப்பான், மண் ஆண்டு அரசு. 42

சூது உவவான், பேரான், சுலா உரையான், யார்திறத்தும்
வாது உவவான், மாதரார் சொல் தேறான், - காது தாழ்
வான் மகர வார் குழையாய்! - மா தவர்க்கு ஊண் ஈந்தான்-
தான் மகர வாய் மாடத்தான். 43

பொய்யான், பொய் மேவான், புலால் உண்ணான், யாவரையும்
வையான், வழி சீத்து, வால் அடிசில் நையாதே
ஈத்து, உண்பான் ஆகும் - இருங் கடல் சூழ் மண் அரசாய்ப்
பாத்து உண்பான், ஏத்து உண்பான், பாடு. 44

இழுக்கான், இயல் நெறி; இன்னாத வெஃகான்;
வழுக்கான், மனை; பொருள் வெளவான்; ஒழுக்கத்தால்
செல்வான்; செயிர் இல் ஊண் ஈவான்; அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து. 45

களியான், கள் உண்ணான், களிப்பாரைக் காணான்,
ஒளியான் விருந்திற்கு, உலையான், எளியாரை
எள்ளான், ஈத்து உண்பானேல், ஏதம் இல் மண் ஆண்டு
கொள்வான், குடி வாழ்வான், கூர்ந்து. 46

பெரியார் சொல் பேணி, பிறழாது நின்று,
பரியா அடியார்ப் பறியான், கரியார் சொல்
தேறான், இயையான், தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் -
மாறான், மண் ஆளுமாம் மற்று. 47

வேற்று அரவம் சேரான், விருந்து ஒளியான் தன் இல்லுள்
சோற்று அரவம் சொல்லி உண்பான் ஆயின், மாற்று அரவம்
கேளான், கிளை ஓம்பின், கேடு இல் அரசனாய்,
வாளால் மண் ஆண்டு வரும். 48

யானை, குதிரை, பொன், கன்னியே, ஆணிரையோடு
ஏனை ஒழிந்த இவை எல்லாம், ஆன் நெய்யால்
எண்ணன் ஆய், மா தவர்க்கு ஊண் ஈந்தான் - வைசிர-
வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து. 49

எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை,
வள்ளே, துணியே, இவற்றோடு, கொள் என,
அன்புற்று, அசனம் கொடுத்தான் - துணையினோடு
இன்புற்று வாழ்வான், இயைந்து. 50

உண் நீர் வளம், குளம், கூவல், வழிப் புரை,
தண்ணீரே, அம்பலம், தான் பாற்படுத்தான் - பண் நீர
பாடலொடு ஆடல் பயின்று, உயர் செல்வனாய்,
கூடலொடு ஊடல் உளான், கூர்ந்து. 51

இல் இழந்தார், கண் இழந்தார், ஈண்டிய செல்வம் இழந்தார்,
நெல் இழந்தார், ஆன் நிரைதான் இழந்தார்க்கு, எல் உழந்து,
பண்ணி ஊண் ஈய்ந்தவர் - பல் யானை மன்னராய்,
எண்ணி ஊண் ஆர்வார், இயைந்து. 52

கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால்
முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு,
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல்
படையராய் வாழ்வார், பயின்று. 53

பார்ப்பார், பசித்தார், தவசிகள், பாலர்கள்,
கார்ப்பார், தமை யாதும் காப்பு இலார், தூப் பால
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் - மண் ஆண்டு,
பண்டாரம் பற்ற வாழ்வார். 54

'ஈன்றார், ஈன்கால் தளர்வார், சூலார், குழவிகள்,
மான்றார், வளியான் மயங்கினார்க்கு, ஆனார்!' என்று,
ஊண் ஈய்த்து, உறு நோய் களைந்தார் - பெருஞ் செல்வம்-
காண் ஈய்த்து வாழ்வார், கலந்து. 55

தளையாளர், தாப்பாளர், தாழ்ந்தவர், பெண்டிர்,
உளையாளர், ஊண் ஒன்றும் இல்லார், கிளைஞராய் -
மா அலந்த நோக்கினாய்! - ஊண் ஈய்ந்தார், மாக் கடல் சூழ்
நாவலம்தீவு ஆள்வாரே, நன்கு. 56

கருஞ் சிரங்கு, வெண் தொழு நோய், கல், வளி, காயும்
பெருஞ், சிரங்கு, பேர் வயிற்றுத் தீயார்க்கு, அருஞ் சிரமம்
ஆற்றி, ஊண் ஈத்து, அவை தீர்த்தார் - அரசராய்ப்
போற்றி ஊண் உண்பார், புரந்து. 57

காமாடார், காமியார், கல்லார்இனம் சேரார்,
ஆம் ஆடார், ஆயந்தார் நெறி நின்று, தாம் ஆடாது,
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார், முன், இம்மையான்
மாற்றாரை மாற்றி வாழ்வார். 58

வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. 59

பெருமை, புகழ், அறம், பேணாமை சீற்றம்,
அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும்,
பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம்,
சாபம்போல் சாரும், சலித்து. 60

ஆர்வமே, செற்றம், கதமே, அறையுங்கால்,
ஒர்வமே, செய்யும் உலோபமே, சீர்சாலா
மானமே, மாய உயிர்க்கு ஊனம் என்னுமே -
ஊனமே தீர்ந்தவர் ஒத்து. 61

கூத்தும், விழவும், மணமும், கொலைக் களமும்,
ஆர்த்த முனையுள்ளும், வேறு இடத்தும், ஒத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே; செல்லின்,
இழுக்கம் இழவும் தரும். 62

ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம்,
பேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடு
கேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார் - இம்மையான்
வேட்டு எழுத வாழ்வார், விரிந்து. 63

உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி,
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி, உயர்ந்தான்
அருந் தவம் ஆற்றச் செயின், வீடு ஆம் என்றார் -
பெருந் தவம் செய்தார், பெரிது. 64

காலனார் ஈடு அறுத்தல் காண்குறின், முற்று உணர்ந்த
பாலனார் நூல் அமர்ந்து, பாராது, வாலிதா,
ஊறுபாடு இல்லா உயர் தவம் தான் புரியின்,
ஏறுமாம், மேல் உலகம் ஓர்ந்து. 65

பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின், - மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று. 66

கூர் அம்பு, வெம் மணல் ஈர் மணி, தூங்கலும்,
ஈரும் புகை, இருளோடு, இருள், நூல் ஆராய்ந்து,
அழி கதி, இம் முறையான், ஆன்றார் அறைந்தார் -
இழி கதி, இம் முறையான் ஏழு. 67

சாதல், பொருள் கொடுத்தல், இன்சொல், புணர்வு உவத்தல்,
நோதல், பிரிவில் கவறலே, ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக,
மென்புடையார் வைத்தார், விரித்து. 68

எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,
படுத்தலோடு, ஆடல், பகரின், அடுத்து உயிர்
ஆறு தொழில் என்று அறைந்தார், உயர்ந்தவர் -
வேறு தொழிலாய் விரித்து. 69

ஐயமே, பிச்சை, அருந் தவர்க்கு ஊண், ஆடை,
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான், வையமும்
வானும் வரிசையால் தான் ஆளும் - நாளுமே,
ஈனமே இன்றி இனிது. 70

நடப்பார்க்கு ஊண், நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண்,
கிடப்பார்க்கு ஊண், கேளிர்க்கு ஊண், கேடு இன்று உடல் சார்ந்த
வானகத்தார்க்கு ஊணே, மறுதலையார்க்கு ஊண், அமைத்தான் -
தான் அகத்தே வாழ்வான், தக. 71

உணராமையால் குற்றம்; ஒத்தான் வினை ஆம்;
உணரான் வினைப் பிறப்புச் செய்யும்; உணராத
தொண்டு இருந் துன்பம் தொடரும்; பிறப்பினான்
மண்டிலமும் ஆகும்; மதி. 72

மனை வாழ்க்கை, மா தவம், என்று இரண்டும், மாண்ட
வினை வாழ்க்கை ஆக விழைப; மனை வாழ்க்கை
பற்றுதல்; இன்றி விடுதல், முன் சொல்லும்; மேல்
பற்றுதல், பாத்து இல் தவம். 73

இடை வனப்பும், தோள் வனப்பும், ஈடின் வனப்பும்,
நடை வனப்பும், நாணின் வனப்பும், புடை சால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு. 74

அறுவர் தம் நூலும் அறிந்து, உணர்வு பற்றி,
மறு வரவு மாறு ஆய நீக்கி, மறு வரவின்
மா சாரியனா, மறுதலைச் சொல் மாற்றுதலே -
ஆசாரியனது அமைவு. 75

ஒல்லுவ, நல்ல உருவ, மேற் கண்ணினாய்!
வல்லுவ நாடி, வகையினால், சொல்லின்,
கொடையினால் போகம்; சுவர்க்கம், தவத்தால்;
அடையாத் தவத்தினால் வீடு. 76

நாற் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான்,
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து, நூற் கதியின்
எல்லை உயர்ந்தார் தவம் முயலின், மூன்று, ஐந்து, ஏழ்,
வல்லை வீடு ஆகும்; வகு! 77

தாய் இழந்த பிள்ளை, தலை இழந்த பெண்டாட்டி,
வாய் இழந்த வாழ்வினார், வாணிகம் போய் இழந்தார்,
கைத்து ஊண் பொருள் இழந்தார், கண்ணிலவர்க்கு, ஈய்ந்தார்; -
வைத்து வழங்கி வாழ்வார். 78

சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே,
நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும், என நாக் காட்ட,
நட்டார்க்கு இயையின், தமக்கு இயைந்த கூறு, உடம்பு
அட்டார்வாய்ப் பட்டது பண்பு. 79

புலையாளர், புண்பட்டார், கண் கெட்டார், போக்கு இல்
நிலையாளர், நீர்மை இழந்தார், தலையாளர்க்கு
ஊண் கொடுத்து, ஊற்றாய் உதவினார் - மன்னராய்க் -
காண் கொடுத்து வாழ்வார், கலந்து. 80

சிறப்புப் பாயிரம்
இல்லற நூல்; ஏற்ற துறவற நூல், ஏயுங்கால்,
சொல் அற நூல்; சோர்வு இன்றித் தொக்கு உரைத்து, நல்ல
அணி மேதை ஆய், நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான், கலந்து.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -ஐந்திணை ஐம்பது

மாறன் பொறையனார் இயற்றிய ஐந்திணை ஐம்பது
இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. பாயிரச் செய்யுள் ஒன்று நூலின் இறுதியில் அமைக்கப் பெற்றுள்ளது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார். இப் பெயரில் மாறன் என்பது பாண்டியனைக் குறிப்பதாயும், பொறையன் என்பது சேரனைக் குறிப்பதாயும் உள்ளன. எனவே, இவர் இந்த இரு பேரரசரோடும் தொடர்புடையவராய், இவர்களுக்கு நட்பினராய் இருத்தல் கூடும். பொறையனார் என்பது இவரது இயர்பெயர் என்றும், மாறன் என்பது இவர் தந்தையார் பெயர் என்றும் கொள்ள இடமுண்டு. இந் நூலின் முதற் செய்யுளில் உவமையாக மாயோன், முருகன், சிவன், மூவரையும் குறித்துள்ளார். இதனால் இவரை வைதிக சமயத்தவர் என்று கருதலாம். பாயிரப் பாடலில் வரும் 'வண் புள்ளி மாறன் பொறையன்' என்ற தொடரைக் கொண்டு, இவர் அரசாங்க வரவு செலவுத் தொடர்புடைய ஓர் அதிகாரியாயிருக்கலாம் என்பர் சிலர். 'வண் புள்ளி' என்பதை வளப்பமான புள்ளி என்னும் ஊர் என்றும் கொள்ள இடமுண்டு.


1. முல்லை
தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது
மல்லர்க் கடந்தான் நிறம் போன்று இருண்டு எழுந்து,
செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி, - நல்லாய்! -
இயங்கு எயில் எய்தவன் தார் பூப்ப, ஈதோ
மயங்கி வலன் ஏரும், கார்! 1

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
அணி நிற மஞ்ஞை அகவ, இரங்கி,
மணி நிற மா மலைமேல் தாழ்ந்து, - பணிமொழி! -
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும்,
பீர் நீர்மை கொண்டன, தோள். 2

பருவம் கண்டு அழிந்த கிழத்திக்குத் தோழி சொல்லியது
மின்னும், முழக்கும், இடியும், மற்று இன்ன
கொலைப் படை சாலப் பரப்பிய, - முல்லை
முகை வென்ற பல்லினாய்! - இல்லையோ, மற்று
நமர் சென்ற நாட்டுள் இக் கார்? 3

உள்ளார்கொல் காதலர் - ஒண்தொடி! - நம் திறம்?
வள் வார் முரசின் குரல்போல் இடித்து உரறி,
நல்லார் மனம் கவரத் தோன்றி, பணிமொழியைக்
கொல்வாங்குக் கூர்ந்தது, இக் கார். 4

கோடு உயர் தோற்ற மலைமேல் இருங் கொண்மூக்
கூடி நிரந்து தலை பிணங்கி, ஓடி,
வளி கலந்து, வந்து உறைக்கும் வானம் காண்தோறும்,
துளி கலந்து வீழ்தரும், கண். 5

முல்லை நறு மலர் ஊதி, இருந் தும்பி
செல்சார்வு உடையார்க்கு இனியவாய், - நல்லாய்! - மற்று
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை
ஈரும், இருள் மாலை வந்து. 6

தேரோன் மலை மறைந்த செக்கர் கொள் புன் மாலை
ஊர் ஆன்பின் ஆயன் உவந்து ஊதும், சீர்சால்,
சிறு குழல் ஓசை, - செறிதொடி! - வேல் கொண்டு
எறிவது போலும் எனக்கு. 7

பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி,
பொருந்தினர் மேனிபோல், பொற்ப, - திருந்திழாய்! -
வானம் பொழியவும் வாரார்கொல், இன்னாத
கானம் கடந்து சென்றார்? 8

'பருவம்' என்று அழிந்த கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது
வருவர் - வயங்கிழாய்! - வாள் ஒண் கண் நீர் கொண்டு,
உருகி, உடன்று அழிய வேண்டா; தெரிதியேல்,
பைங்கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன,
வம்ப மழை உரறக் கேட்டு. 9

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது
நூல் நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக!
தேன் நவின்ற கானத்து எழில் நோக்கி, தான் நவின்ற
கற்புத் தாள் வீழ்த்து, கவுள்மிசைக் கை ஊன்றி,
நிற்பாள் நிலை உணர்கம் யாம். 10

2. குறிஞ்சி
பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், செறிப்பு அறிவுறீஇயது
பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
நன் மலை நாடன் நலம் புனைய, - மென்முலையாய்! -
போயின, சில் நாள் புனத்து மறையினால்
ஏயினா இன்றி, இனிது. 11

பகற்குறி வந்து பெயர்கின்ற தலைமகனைக் கண்ணுற்றுத் தோழி செறிப்பு அறிவுறீஇயது
மால் வரை வெற்ப! வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம், யாம்; தூ அருவி
பூக் கண் கழூஉம் புறவிற்றாய், பொன் விளையும்
பாக்கம் இது, எம் இடம். 12

சிறைப்புறத்தானாகத் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
'கானக நாடன் கலவான் என் தோள்!' என்று, -
மான் அமர் கண்ணாய்! - மயங்கல் நீ! நானம்
கலந்து இழியும் நல் மலைமேல் வால் அருவி ஆட,
புலம்பும் அகன்று நில்லா! 13


தோழி தலைமகட்கு மெலிதாகச் சொல்லி, குறை நயப்புக் கூறியது
புனை பூந் தழை அல்குல் பொன் அன்னாய்! சாரல்
தினை காத்து இருந்தேம் யாம் ஆக, வினை வாய்த்து
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டுத்
தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு. 14

பகற்குறிக்கன் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தாய் கேட்டதற்கு மறு மாற்றம் சொல்லுவாள் போலப் படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து,
மாந் தளிர் மேனி வியர்ப்ப, மற்று ஆங்கு எனைத்தும்
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக, பணிமொழிக்குச்
சேந்தனவாம், சேயரிக் கண்தாம். 15

இரவுக்குறி வந்து பெயரும் தலைமகனைக் கண்ணுற்று நின்ற தோழி வரைவு கடாயது
கொடு வரி வேங்கை பிழைத்து, கோட்பட்டு, -
மடி செவி வேழம் - இரீஇ, அடி ஓசை
அஞ்சி, ஒதுங்கும் அதர் உள்ளி, ஆர் இருள்
துஞ்சா, சுடர்த்தொடி கண். 16

'மஞ்சு இவர் சோலை வள மலை நல் நாட!
எஞ்சாது நீ வருதி' என்று எண்ணி, அஞ்சி,
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர்
உரு ஒடுங்கும், உள் உருகி நின்று. 17

தோழி செறிப்பு அறிவுறீஇ, தலைமகனை வரைவு கடாயது
எறிந்து, எமர்தாம் உழுத ஈர்ங் குரல் ஏனல்,
மறந்தும், கிளி இனமும் வாரா; - கறங்கு அருவி
மா மலை நாட! - மட மொழிதன் கேண்மை
நீ மறவல் நெஞ்சத்துக் கொண்டு. 18

தோழி இரவுக்குறியின்கண் நெறி விலக்கி, வரைவு கடாயது
நெடு மலை நல் நாட! நீள் வேல் துணையா,
கடு விசை வால் அருவி நீந்தி, நடு இருள்,
இன்னா அதர் வர, 'ஈர்ங் கோதை மாதராள்
என்னாவாள்!' என்னும், என் நெஞ்சு. 19

தலைமகள் தோழிக்கு அறத்தொடு நின்று வெறி விலக்கவேண்டும் உள்ளத்தாளாய்ச் சொல்லியது
வெறி கமழ் வெற்பன் என் மெய்ந் நீர்மை கொண்டது
அறியாள், மற்று அன்னோ! 'அணங்கு அணங்கிற்று!' என்று,
மறி ஈர்த்து உதிரம் தூய், வேலன் - தரீஇ,
வெறியோடு அலம்வரும், யாய். 20

3. மருதம்
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது
கொண்டுழிப் பண்டம் விலை ஒரீஇக் கொற்சேரி
நுண் துளைத் துன்னூசி விற்பாரின், ஒன்றானும்
வேறு அல்லை, - பாண! - வியல் ஊரன் வாய்மொழியைத்
தேற, எமக்கு உரைப்பாய், நீ. 21

போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்குத்
தூதாய்த் திரிதரும் பாண் மகனே! நீதான்
அறிவு அயர்ந்து, எம் இல்லுள் என் செய்ய வந்தாய்?
நெறி அதுகாண், எங்கையர் இற்கு. 22

யாணர் அகல் வயல் ஊரன் அருளுதல், -
பாண! - பரிந்து உரைக்க வேண்டுமோ? மாண
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று? 23

கோலச் சிறு குருகின் குத்து அஞ்சி, ஈர் வாளை
நீலத்துப் புக்கு ஒளிக்கும் ஊரற்கு, மேல் எல்லாம்,
சார்தற்குச் சந்தனச் சாந்து ஆயினேம்; இப் பருவம்
காரத்தின் வெய்ய, என் தோள்! 24

வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன்
விழைதகு மார்பம் உறும், நோய் - விழையின்,
குழலும் குடுமி என் பாலகன் கூறும்
மழலை வாய்க் கட்டுரையால். 25

புதல்வனை முனிந்து, தலைமகள் மறுத்தாளைப் போல, தோழிக்கு வாயில் நேர்ந்தது
பெய் வளைக் கையாய்! பெரு நகை ஆகின்றே -
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப,
கை புனை தேர் ஏறிச் செல்வானைச் சென்று இவன்
எய்தி, இடர் உற்றவாறு! 26

வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்தது
தண் வயல் ஊரற் புலக்கும் தகையமோ?-
நுண் அறல் போல நுணங்கிய ஐங் கூந்தல்,
வெண் மரல் போல நிறம் திரிந்து, வேறாய
வண்ணம் உடையேம், மற்று யாம். 27

தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்தது
ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு
வல்லென்றது என் நெஞ்சம் - வாட்கண்ணாய்! - 'நில்' என்னாது,
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப, என்னானும்
நோக்கான், தேர் ஊர்ந்தது கண்டு. 28

ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கிய பின்பு, சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது
'ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பம்
புல்லேன் யான்' என்பேன்; - புனையிழையாய்! - புல்லேன்
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ, ஊரன் -
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன்? 29

குளிரும் பருவத்தேஆயினும், தென்றல்
வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்; - ஒளியிழாய்! -
ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம், எனக்கு. 30

4. பாலை
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்,
எதிரி முருக்கு அரும்ப, ஈர்ந் தண் கார் நீங்க, எதிருநர்க்கு
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்,
துன்பம் கலந்து அழியும், நெஞ்சு. 31

தலைமகனது பிரிவுக் குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது
விலங்கல்; விளங்கிழாய்! செல்வாரோ அல்லர் -
அழல் பட்டு அசைந்த பிடியை, எழில் களிறு,
கல் சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையால் கொண்டு,
உச்சி ஒழுக்கும் சுரம். 32

மகட் போக்கிய நற்றாய் கவன்று சொல்லியது
பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு? 33

தோழி, தலைமகனைச் செலவு அழுங்கியது
கோட்டு அமை வல் வில் கொலை பிரியா வன்கண்ணர்
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி.
வேட்ட முனைவயின் சேறிரோ - ஐய! - நீர்
வாள் தடங் கண் மாதரை நீத்து? 34

தலைமகன் பொருள்வயின் பிரிந்த காலத்து, 'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள், 'ஆற்றுவல்' என்பதுபட மொழிந்தது
கொடு வில் எயினர் தம் கொல் படையால் வீழ்த்த
தடி நிணம் மாந்திய பேஎய், நடுகல்
விரி நிழல், கண்படுக்கும் வெங் கானம் என்பர்,
பொருள் புரிந்தார் போய சுரம். 35

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் உடன்படாது சொல்லியது
கடிது ஓடும் வெண்தேரை, 'நீர் ஆம்' என்று எண்ணி,
பிடியோடு ஒருங்கு ஓடி, தாள் பிணங்கி, வீழும்
வெடி ஓடும் வெங் கானம் சேர்வார்கொல், - நல்லாய்! -
தொடி ஓடி வீழத் துறந்து? 36

உடன் போய தலைமகட்கு நற்றாய் கவன்று உரைத்தது
தோழியர் சூழத் துறை முன்றில் ஆடுங்கால்,
வீழ்பவள் போலத் தளரும் கால், தாழாது,
கல் அதர் அத்தத்தைத் காதலன்பின் போதல்
வல்லவோ, மாதர் நடை? 37

பிரிவின்கண் ஆற்றாளாயின தலைமகளைத் தோழி ஆற்றுவித்தது
சுனை வாய்ச் சிறு நீரை, 'எய்தாது' என்று எண்ணி,
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. 38
தலைமகன் பொருள் வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது
மடவைகாண்; - நல் நெஞ்சே! - மாண் பொருள்மாட்டு ஓட,
புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள், படர் கூர்ந்து
விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ,
நம்மின் பிரிந்த இடத்து? 39

இன்று அல்கல் ஈர்ம் படையுள் ஈர்ங்கோதை தோள் துணையா
நன்கு வதிந்தனை; - நல் நெஞ்சே! - நாளை நாம்
குன்று அதர் அத்தம் இறந்து, தமியமாய்,
என்கொலோ சேக்கும் இடம்? 40

5. நெய்தல்
அல்லகுறிப்பட்ட தலைமகற்குச் சொல்லுவாளாய், தோழி தலைமகட்குச் சொல்லியது
தெண் கடற் சேர்ப்பன் பிரிய, புலம்பு அடைந்து,
ஒண் தடங் கண் துஞ்சற்க! - ஒள்ளிழாய்! - நண்பு அடைந்த
சேவலும் தன் அருகில் சேக்குமால்; என்கொலோ,
பூந் தலை அன்றில் புலம்பு? 41

காமம் மிக்க கழிபடர் கிளவி
கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்;
ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர்
கடந்த வழியை எம் கண் ஆரக் காண,
நடந்து சிதையாதி, நீ! 42

பொரிப் புறப் பல்லிச் சினை ஈன்ற புன்னை
வரிப் புற வார் மணல்மேல் ஏறி, தெரிப்புறத்
தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல்,
ஆழியால் காணாமோ, யாம்! 43

பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, படைத்து மொழி கிளவியால் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது
கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி,
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம்
கண்டு, அன்னை, 'எவ்வம் யாது?' என்ன, 'கடல் வந்து என்
வண்டல் சிதைத்தது' என்றேன். 44

தலைமகனைத் தோழி வரைவு கடாதற்பொருட்டுத் தலைமகள் வரைவு வேட்டுச் சொல்லியது
ஈர்ந் தண் பொழிலுள், இருங் கழித் தண் சேர்ப்பன்
சேர்ந்து, என் செறி வளைத் தோள் பற்றித் தெளித்தமை,-
மாந் தளிர் மேனியாய்! - மன்ற விடுவனவோ,
பூந் தண் பொழிலுள் குருகு? 45

பகற்குறி வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்ணுற்று நின்று தோழி வரைவு கடாயது
ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம்
பேதை மடவார் தம் வண்டல் விளக்கு அயரும்
கானல் அம் சேர்ப்ப! தகுவதோ, என் தோழி
தோள் நலம் தோற்பித்தல் நீ? 46

தோழிக்குத் தலைமகன் சொல்லியது; தோழற்குச் சொல்லியதூஉம் ஆம்
பெருங்கடல் உள் கலங்க, நுண் வலை வீசி,
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன்
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர்
அணங்கு ஆகும், ஆற்ற எமக்கு. 47

தலைமகனைத் தோழி வரைவு கடாயது
எக்கர் இடு மணல்மேல் ஓதம் தர வந்த
நித்திலம் நின்று இமைக்கும் நீள் கழித் தண் சேர்ப்ப!
மிக்க மிகு புகழ் தாங்குபவோ, தற் சேர்ந்தார்
ஒற்கம் கடைப்பிடியாதார்? 48

அல்லகுறிப்பட்டுப் பெயர்ந்தமை அறிய, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி சொல்லியது.
கொடு முள் மடல் தாழைக் கூம்பு அவிழ்ந்த ஒண் பூ
இடையுள் இழுது ஒப்பத் தோன்றி, புடை எலாம்
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன்
செய்தான், தெளியாக் குறி. 49

அணி கடல் தண் சேர்ப்பன் தேர்ப் பரிமாப் பூண்ட
மணி அரவம் என்று, எழுந்து போந்தேன்; கனி விரும்பும்
புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தேன், - ஒளியிழாய்! -
உள் உருகு நெஞ்சினேன் ஆய். 50

சிறப்பு பாயிரம்
பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய,
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்,
செந்தமிழ் சேராதவர்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-ஐந்திணை எழுபது

மூவாதியார் இயற்றிய ஐந்திணை எழுபது
ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் இந் நூல் அமைந்துள்ளதால், ஐந்திணை எழுபது என பெயர் பெற்றது. இந் நூலின் முதலில் விநாயகரைக் குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று உள்ளது. இக் கடவுள் வாழ்த்து நூலுக்குப் புறம்பாதலோடு, இதற்குப் பழைய உரைகாரர் உரை எழுதாமையாலும், இச் செய்யுள் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூற இயலாது. இச் செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. ஐந்திணை நூல்களில் வேறு ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்து பாடல் இல்லாமையும் சிந்திக்கத் தக்கது. இந் நூலில் உள்ள 70 பாடலகளில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26), நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்துபட்டன. இந் நூலை ஆக்கியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர்.


1. குறிஞ்சி
தோழி தலைமகனை வரைவு கடாயது
அவரை பொருந்திய பைங் குரல் ஏனல்
கவரி மட மா கதூ உம் படர் சாரல்
கானக நாட! மறவல், வயங்கிழைக்கு
யான் இடை நின்ற புணை. 1

கொல்லைப் புனத்த அகில் சுமந்து, கல் பாய்ந்து,
வானின் அருவி ததும்ப, கவினிய
நாடன் நயம் உடையன் என்பதனால், நீப்பினும்,
வாடல் மறந்தன, தோள். 2

தோழி தலைமகன் வரைவு மலிந்தமை தலைமகட்குச் சொல்லியது
இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில்,
குலையுடைக் காந்தள், இன வண்டு இமிரும்
வரையக நாடனும் வந்தான்; மற்று அன்னை
அலையும் அலை போயிற்று, இன்று. 3

தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
மன்றப் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டு, உவந்து, மந்தி முலை வருட, கன்று அமர்ந்து,
ஆமா சுரக்கும் அணி மலை நாடனை
யாமாப் பிரிவது இலம். 4

சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல்
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை
நயம் திகழும் என்னும், என் நெஞ்சு. 5

புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை
நல் மலை நாட! மறவல்; வயங்கிழைக்கு
நின் அலது இல்லையால்; ஈயாயோ, கண்ணோட்டத்து
இன் உயிர் தாங்கும் மருந்து? 6

பகற்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக,
படைத்து மொழி கிளவியால் தோழி வரைவு கடாயது
காய்ந்தீயல், அன்னை! இவளோ தவறு இலள்; -
ஓங்கிய செந் நீர் இழிதரும் கான் யாற்றுள்,
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட,
தாம் சிவப்பு உற்றன, கண். 7

புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது
வெறி கமழ் தண் சுனைத் தெண்ணீர் துளும்ப,
கறி வளர் தே மா நறுங் கனி வீழும்
வெறி கமழ் தண் சோலை நாட! ஒன்று உண்டோ ,
அறிவின்கண் நின்ற மடம்? 8

தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
மன்றத் துறுகல் கருங் கண் முசு உகளும்
குன்றக நாடன் தெளித்த தெளிவினை
நன்று என்று தேறித் தெளிந்தேன், தலையளி
ஒன்று; மற்று ஒன்றும் அனைத்து. 9

தோழி தலைமகனைக் கண்டு வரைவு கடாயது
பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல்
மரையான் குழவி குளம்பின் துகைக்கும்
வரையக நாட! வரையாய வரின், எம்
நிரைதொடி வாழ்தல் இலள். 10

தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் கேட்ப, இயற்பட மொழிந்தது
கேழல் உழுத கரி புனக் கொல்லையுள்,
வாழை முது காய் கடுவன் புதைத்து அயரும்
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான், என் தோழி
நேர்வளை நெஞ்சு ஊன்று கோல். 11

தலைமகன் சிறைப்புறத்தானாக, இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது
பெருங் கை இருங் களிறு ஐவனம் மாந்தி,
கருங் கால் மராம் பொழில் பாசடைத் துஞ்சும்,
சுரும்பு இமிர் சோலை, மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து. 12

வெறியாட்டு எடுத்துக்கொண்ட இடத்து, தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது
வார் குரல் ஏனல் வளை வாய்க் கிளி கவரும்,
நீரால் தெளி திகழ், கான் நாடன் கேண்மையே
ஆர்வத்தின் ஆர முயங்கினேன்; வேலனும்
ஈர, வலித்தான், மறி. 13

தலைமகன் வரும் வழியின் ஏதத்திற்குக் கவன்ற தலைமகள் வரைவு வேட்டு, தோழிக்குச் சொல்லியது
குறை ஒன்று உடையேன்மன்; - தோழி! - நிறை இல்லா
மன்னுயிர்க்கு ஏமம் செயல் வேண்டும்; இன்னே,
அரா வழங்கு நீள் சோலை நாடனை நம் இல்,
'இரா வாரல்' என்பது உரை. 14

2. முல்லை
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
செங் கதிர்ச் செல்வன் சினம் கரந்த போழ்தினால்,
பைங் கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிர,
காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும்
நீரோடு அலமரும், கண். 15

தட மென் பணைத் தோளி! நீத்தாரோ வாரார்;
மட நடை மஞ்ஞை அகவ, கடல் முகந்து,
மின்னோடு வந்தது எழில் வானம்; வந்து, என்னை,
'என் ஆதி?' என்பாரும் இல். 16

தண் நறுங் கோடல் துடுப்பு எடுப்ப, கார் எதிரி
விண் உயர் வானத்து உரும் உரற்ற, திண்ணிதின்
புல்லுநர் இல்லார் நடுங்க, சிறு மாலை,
கொல்லுநர் போல, வரும். 17

கதழ் உறை வானம் சிதற, இதழகத்துத்
தாது இணர்க் கொன்றை எரி வளர்ப்ப, பாஅய்
இடிப்பது போலும் எழில் வானம் நோக்கி,
துடிப்பது போலும், உயிர். 18

ஆலி விருப்புற்று அகவி, புறவி எல்லாம்
பீலி பரப்பி, மயில் ஆல, சூலி
விரிகுவது போலும் இக் கார் அதிர, ஆவி
உருகுவது போலும், எனக்கு. 19

இனத்த அருங் கலை பொங்க, புனத்த
கொடி மயங்கு முல்லை தளிர்ப்ப, இடி மயங்கி,
யானும் அவரும் வருந்த, சிறு மாலை-
தானும் புயலும் வரும். 20

காரிகை வாடத் துறந்தாரும் வாராமுன்,
கார்க் கொடி முல்லை எயிறு ஈன, காரோடு
உடன்பட்டு வந்து அலைக்கும் மாலைக்கோ, எம்மின்
மடம் பட்டு வாழ்கிற்பார் இல். 21

கொன்றைக் குழல் ஊதிக் கோவலர் பின் நிரைத்து,
கன்று அமர் ஆயம் புகுதர, இன்று
வழங்கிய வந்தன்று, மாலை; யாம் காண,
முழங்கி, வில் கோலிற்று, வான். 22

பருவம் கண்டு அழிந்த தலைமகள் சொல்லியது
தேரைத் தழங்குரல் தார் மணி வாய் அதிர்ப்ப,
ஆர் கலி வானம் பெயல் தொடங்கி, கார் கொள,
இன்று ஆற்ற வாரா விடுவார்கொல், காதலர்?
ஒன்றாலும் நில்லா, வளை. 23
கல் ஏர் புறவில் கவினி, புதல்மிசை
முல்லை தளவொடு போது அவிழ, எல்லி
அலைவு அற்று விட்டன்று வானமும்; உண்கண்,
முலை வற்று விட்டன்று, நீர். 24

[இது முதல் துறைக்குறிப்புகள் கிடைக்கவில்லை]
................. 25
................. 26

கார்ப்புடைப் பாண்டில் கமழ, புறவு எல்லாம்
ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட, நீர்த்து அன்றி
ஒன்றாது அலைக்கும் சிறு மாலை, மால் உழந்து
நின்றாக நின்றது நீர். 27

குருந்து அலை வான் படலை சூடிச் சுரும்பு ஆர்ப்ப,
ஆயன் புகுதரும் போழ்தினான், ஆயிழாய்!
பின்னொடு நின்று ..... படு மழை கொ ....ல்
என்னொடு பட்ட வகை. 28

3. பாலை
எழுத்துடைக் கல் நிரைக்க வாயில் விழுத் தொடை
அம் மாறு அலைக்கும் சுரம் நிரைத்து, அம் மாப்
பெருந் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள்
ஆகும், அவர் காதல் அவா. 29

வில் உழுது உண்பார் கடுகி அதர் அலைக்கும்
கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல்-
மெல் இயல் கண்ணோட்டம் இன்றி, பொருட்கு இவர்ந்து,
நில்லாத உள்ளத்தவர்? 30

பேழ் வாய் இரும் புலி குஞ்சரம் கோள் பிழைத்துப்
பாழ் ஊர்ப் பொதியில் புகாப் பார்க்கும் ஆர் இடை,
சூழாப் பொருள் நசைக்கண் சென்றோர், அருள் நினைந்து,
வாழ்தியோ மற்று என் உயிர்? 31

நீர் இல் அருஞ் சுரத்து ஆமான்இனம் வழங்கும்
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல்? - ஆயிழாய்! -
நாணினை நீக்கி, உயிரோடு உடன் சென்று
காண, புணர்ப்பதுகொல் நெஞ்சு? 32

பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த,
நெறி தூர் அருஞ் சுரம் நாம் உன்னி, அறிவிட்டு
அலர் மொழிச் சென்ற கொடி அக நாட்ட,
வலன் உயர்ந்து தோன்றும் மலை. 33

பீர் இவர் கூரை மறு மனைச் சேர்ந்து அல்கி,
கூர் உகிர் எண்கின் இருங் கிளை கண்படுக்கும்,
நீர் இல், அருஞ் சுரம் முன்னி அறியார்கொல்,
ஈரம் இல் நெஞ்சினவர்? 34

சூரல் புறவின் அணில் பிளிற்றும் சூழ் படப்பை
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும்
தேரொடு கானம், தெருள் இலார் செல்வார்கொல்,
ஊர் இடு கவ்வை ஒழித்து? 35

முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை,
புள்ளி வெருகு தன் குட்டிக்கு இரை பார்க்கும்
கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. 36

பொரி புற ஓமைப் புகர் படு நீழல்,
வரி நுதல் யானை பிடியோடு உறங்கும்
எரி மயங்கு கானம் செலவு உரைப்ப, நில்லா,
அரி மயங்கு உண்கண்ணுள் நீர். 37

கோள் வல் .... வய மாக் குழுமும்
தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல்-
ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்று உணரா
மீளி கொள் மொய்ம்பினவர்? 38

கொடுவரி பாயத் துணை இழந்து அஞ்சி,
கடு உணங்கு பாறைக் கடவு தெவுட்டும்
நெடு வரை அத்தம் இறப்பர்கொல், கோள் மாப்
படு பகை பார்க்கும் சுரம்? 39

மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்ப,
குன்றகம் நண்ணி, குறும்பு இறந்து சென்றவர்
உள்ளிய தன்மையர்போலும் - அடுத்து அடுத்து
ஒள்ளிய தும்மல் வரும். 40

பூங் கண் இடம் ஆடும்; கனவும் திருந்தின;
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப,
வீங்கிய மென் தோள் கவினிப் பிணி தீர,
பாங்கத்துப் பல்லி படும். 41

'ஒல்லோம்!' என்று ஏங்கி, உயங்கி இருப்பவோ?
கல் இவர் அத்தம், அரி பெய் சிலம்பு ஒலிப்பக்
கொல் களிறு அன்னான்பின் செல்லும்கொல், என் பேதை
மெல் விரல் சேப்ப நடந்து? 42

4. மருதம்
ஆற்றல் உடையன், அரும் பொறி நல் ஊரன்,
மேற்றுச் சிறு தாய காய்வு அஞ்சி, போற்று உருவிக்
கட்டக முத்தின் புதல்வனை மார்பின்மேல்
பட்டம் சிதைப்ப வரும். 43

அகன் பணை ஊரனைத் தாமம் பிணித்தது
இகன்மை கருதி இருப்பல்; - முகன் அமரா
ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ,
பேதைமை கண்டு ஒழுகுவார்? 44

போத்து இல் கழுத்தின் புதல்வன் உணச் சான்றான்;
மூத்தேம் இனி யாம்; வரு முலையார் சேரியுள்,
நீத்து நீர் ஊன வாய்ப் பாண! நீ போய் மொழி;
கூத்தாடி உண்ணினும் உண். 45

உழலை முருக்கிய செந் நோக்கு எருமை
பழனம் படிந்து, செய் மாந்தி, நிழல் வதியும்,
தண் துறை ஊரன் மலர் அன்ன மார்புற,
பெண்டிர்க்கு உரை - பாண! - உய்த்து. 46

தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனைப்
பூங் கண் புதல்வன் மிதித்து உழக்க, ஈங்குத்
தளர் முலை பாராட்டி, என்னுடைய பாவை
வளர் முலைக்கண் ஞெமுக்குவார். 47

பேதை! புகலை; புதல்வன் துணைச் சான்றோன்
ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும்?
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள்
ஓவாது செல் - பாண! - நீ. 48

யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல்; என்னுடைய
பாண! இருக்க அது களை; நாண் உடையான்
தன் உற்ற எல்லாம் இருக்க; இரும் பாண!
நின் உற்றதுண்டேல், உரை. 49

ஒள் இதழ்த் தாமரைப் போது உறழும் ஊரனை
உள்ளம்கொண்டு உள்ளான் என்றுயார்க்கு உரைக்கோ?-ஒள்ளிழாய்!-
அச்சுப் பணி மொழி உண்டேனோ, மேல் நாள் ஓர்
பொய்ச் சூள் என அறியாதேன்? 50

பேதையர் என்று தமரைச் செறுபவோ?
போது உறழ் தாமரைக்கண் ஊரனை நேர் நோக்கி,
வாய் மூடி இட்டும் இருப்பவோ?- மாணிழாய்! -
நோவது என்? மார்பு அறியும், இன்று. 51

காதலின் தீரக் கழிய முயங்கன்மின்;
ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனைப்
பேதைப் பட்டு ஏங்கன்மின் நீயிரும், எண் இலா
ஆசை ஒழிய உரைத்து. 52

'உள் நாட்டம் சான்றவர் தந்த நசை இற்று என்று
எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதும்' என்று எண்ணி,
வழிபாடு கொள்ளும் வள வயல் ஊரன்
பழிபாடு நின் மேலது. 53

உண் துறைப் பொய்கை வராஅல்இனம் இரியும்
தண் துறை ஊர! தகுவதோ, - ஒண்டொடியைப்
பாராய், மனை துறந்து, அச் சேரிச் செல்வதனை
ஊராண்மை ஆக்கிக்கொளல்? 54

பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல்! என்னுடைய
எவ்வம் எனினும், எழுந்தீக; வைகல்
மறு இல் பொலந் தொடி வீசும், அலற்றும்,
சிறுவன் உடையேன் துணை. 55

வள வயல் ஊரன் மருள் உரைக்கு மாதர்
வளைஇய சக்கரத்து ஆழி, கொளை பிழையாது,
ஒன்று இடைஇட்டு வருமேல், நின் வாழ் நாட்கள்
ஒன்றி அனைத்தும் உளேன். 56

5. நெய்தல்
ஒழுகு திரைக் கரை வான் குருகின் தூவி
உழிதரும் ஊதை எடுக்கும் துறைவனைப்
பேதையான் என்று உணரும், நெஞ்சம்; இனிது உண்மை
ஊதியம் அன்றோ உயிர்க்கு? 57

என்னைகொல்? தோழி! அவர்கண்ணும் நன்கு இல்லை;
அன்னைமுகனும் அது ஆகும்; பொன் அலர்
புன்னை அம் பூங் கானற் சேர்ப்பனை, 'தக்க தேர்;
நின் அல்லது இல்' என்று உரை. 58

இடு மணல் எக்கர் அகன் கானல் சேர்ப்பன்
கடு மான் மணி அரவம் என்று, கொடுங்குழை
புள் அரவம் கேட்டுப் பெயர்ந்தாள் - 'சிறு குடியர்
உள் அரவம் நாணுவர்' என்று. 59

மணி நிற நெய்தல் இருங் கழிச் சேர்ப்பன்
அணி நலம் உண்டு அகன்றான்; என்கொல், எம்போல்
தணி மணல் எக்கர்மேல் ஓதம் பெயர,
துணி முந்நீர் துஞ்சாதது? 60

கண் திரள் முத்தம் பயக்கும் இரு முந்நீர்ப்
பண்டம் கொள் நாவாய் வழங்கும் துறைவனை
முண்டகக் கானலுள் கண்டேன் எனத் தெளிந்தேன்,
நின்ற உணர்வு இலாதேன். 61

'அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும்
கொடுங் கழிச் சேர்ப்பன் அருளான்' எனத் தெளிந்து,
கள்ள மனத்தான் அயல் நெறிச் செல்லும்கொல்,
நல் வளை சோர, நடந்து? 62

கள் நறு நெய்தல் கமழும் கொடுங் கழித்
தண்ணம் துறைவனோ தன் இலன்; ஆயிழாய்!
வள்நகைப்பட்டதனை ஆண்மை எனக் கருதி,
பண் அமைத் தேர்மேல் வரும். 63

தெண் நீர் இருங் கழி, வேண்டும் இரை மாந்தி,
பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்!
தண்ணம் துறைவற்கு உரையாய், 'மடமொழி
வண்ணம் தா' என்று தொடுத்து. 64

எறி சுறாக் குப்பை இனம் கலக்கத் தாக்கும்
எறி திரைச் சேர்ப்பன் கொடுமை அறியாகொல் -
கானகம் நண்ணி அருள் அற்றிடக் கண்டும்,
கானலுள் வாழும் குருகு? 65

நுண் ஞாண் வலையின் பரதவர் போத்தந்த
பல் மீன் உணங்கல் கவரும் துறைவனைக்
கண்ணினால் காண அமையும்கொல்? 'என் தோழி
வண்ணம் தா' என்கம், தொடுத்து. 66

இவர் திரை நீக்கியிட்டு, எக்கர் மணல்மேல்
கவர் கால் அலவன் தன பெடையோடு,
தவழும் இருங் கழிச் சேர்ப்ப! என் தோழி-
படர் பசலை பாயின்று - தோள். 67

சிறு மீன் கவுள் கொண்ட செந் தூவி நாராய்!
இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி,
நெறி நீர் இருங் கழிச் சேர்ப்பன் அகன்ற
நெறி அறிதி, மீன் தபு நீ. 68

................. 69
................. 70

நூலைச் சேர்ந்ததாக ஊகிக்கும் பாடல்
முடம் முதிர் புன்னைப் படுகோட்டு இருந்த
மடமுடை நாரைக்கு உரைத்தேன் - கடன் அறிந்து
பாய்திரைச் சேர்ப்பன் பரித் தேர் வர, கண்டு,
'நீ தகாது' என்று நிறுத்து.
மிகைப் பாடல்
கடவுள் வாழ்த்து
எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து, எமக்கு
நண்ணும் கலை அனைத்தும் நல்குமால் - கண்ணுதலின்
முண்டத்தான், அண்டத்தான், மூலத்தான், ஆலம் சேர்
கண்டத்தான் ஈன்ற களிறு.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-கார் நாற்பது

மதுரைக் கண்ணங்கூத்தனார் இயற்றிய கார் நாற்பது
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறயது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்லை நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூலில் வேள்வித் தீயையும் (7) கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும்(26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டை வழக்கமாகும். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது.


தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது
பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,
திருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,
'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம்
கரு இருந்து ஆலிக்கும் போழ்து? 1

கடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,
நெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்!-
'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம்
மின்னும், அவர் தூது உரைத்து. 2

பருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது
வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே-
நெருநல், ஒருத்தி திறத்து. 3

தோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தது
ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,
காடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;
பாடு வண்டு ஊதும் பருவம், - பணைத் தோளி!-
வாடும் பசலை மருந்து. 4

இகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்-
பகழிபோல் உண் கண்ணாய்! - பொய் அன்மை; ஈண்டைப்
பவழம் சிதறியவை போலக் கோபம்
தவழும் தகைய புறவு. 5

தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி,
வடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்! வருந்தல்;-
கடிது இடி வானம் உரறும், நெடு இடைச்
சென்றாரை, 'நீடல்மின்' என்று. 6

நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,
தற் செய்வான் சென்றார்த் தரூஉம், - தளரியலாய்!-
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச் சாரும் மின்னும், மழை. 7

மண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி,
பெண் இயல் நல்லாய்! பிரிந்தார் வரல் கூறும்-
கண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும்
நுண் அரும்பு ஊழ்த்த புறவு. 8

கருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;
எரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை
முன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,
இன் சொல் பலவும் உரைத்து. 9

வான் ஏறு வானத்து உரற, வய முரண்
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக்,
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் - என் தோழி!-
மேனி தளிர்ப்ப, வரும். 10

புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,
வணர் ஒலி ஐம்பாலாய்! வல் வருதல் கூறும்-
அணர்த்து எழு பாம்பின் தலைபோல் புணர் கோடல்
பூங் குலை ஈன்ற புறவு. 11

மை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்; -
நெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ
வைகலும் ஏரும், வலம். 12

ஏந்து எழில் அல்குலாய்! ஏமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பின் பெயல் தாழ, வேந்தர்
களிறு எறி வாள் அரவம் போலக் கண் வெளவி,
ஒளிறுபு மின்னும், மழை. 13

செல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம்; - வயங்கிழாய்!-
முல்லை இலங்கு எயிறு ஈன, நறுந் தண் கார்
மெல்ல இனிய நகும். 14

திருந்திழாய்! காதலர் தீர்குவர் அல்லர்-
குருந்தின் குவி இணர் உள் உறை ஆகத்
திருந்து இன் இளி வண்டு பாட, இருந் தும்பி
இன் குழல் ஊதும் பொழுது. 15

கருங் குயில் கையற, மா மயில் ஆல,
பெருங் கலி வானம் உரறும் - பெருந்தோள்!
செயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப்
பயலை பழங்கண் கொள. 16

அறைக் கல் இறு வரைமேல் பாம்பு சவட்டி,
பறைக் குரல் ஏறொடு பெளவம் பருகி,
உறைத்து இருள் கூர்ந்தன்று, வானம்; பிறைத் தகை
கொண்டன்று, - பேதை! - நுதல். 17

கல் பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப,
செல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்
மேனிபோல் புல்லென்ற காடு. 18

வினை முற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது
நாஞ்சில் வலவன் நிறம் போலப் பூஞ் சினைச்
செங் கால் மராஅம் தகைந்தன; பைங் கோல்
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,
நெடு இடைச் சென்றது, என் நெஞ்சு. 19

வீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன;
ஆறும் பதம் இனிய ஆயின; ஏறொடு
அரு மணி நாகம் அனுங்க, செரு மன்னர்
சேனைபோல் செல்லும், மழை. 20

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே
சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,
செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்
முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து. 21

இளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து,
புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார்
இள நலம் போலக் கவினி, வளம் உடையார்
ஆக்கம்போல் பூத்தன, காடு. 22

தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது
கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று; எவன் கொலோ,
ஒண்டொடி! ஊடும் நிலை? 23

[இது முதல் 39 வரையுள்ள செய்யுட்களுக்குத் துறைக் குறிப்புக்கள் ஏட்டுச் சுவடிகளில் இறந்துபட்டன.]
எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே!
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;
பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்
எல்லியும் தோன்றும், பெயல். 24

கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,
ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;
சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று
கூர்ந்த, பசலை அவட்கு. 25

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி,
புலம் எலாம் பூத்தன தோன்றி; - சிலமொழி!-
தூதொடு வந்த, மழை. 26

முருகியம்போல் வானம் முழங்கி இரங்க,
குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,
'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட,
பள்ளியுள் பாயும், பசப்பு. 27

இமிழ் இசை வானம் முழங்க, குமிழின் பூப்
பொன் செய் குழையின் துணர் தூங்க, தண் பதம்
செல்வி உடைய, சுரம் - நெஞ்சே! - காதலி ஊர்
கவ்வை அழுங்கச் செலற்கு. 28

பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன; தங்காத்
தகை வண்டு பாண் முரலும், கானம்; பகை கொண்டல்
எவ்வெத் திசைகளும் வந்தன்று; சேறும் நாம்,
செவ்வி உடைய சுரம். 29

வரை மல்க, வானம் சிறப்ப, உறை போழ்ந்து
இரு நிலம் தீம் பெயல் தாழ, விரை நாற,
ஊதை உளரும், நறுந் தண் கா, பேதை
பெரு மடம் நம்மாட்டு உரைத்து. 30

கார்ச் சேண் இகந்த கரை மருங்கின் நீர்ச் சேர்ந்து,
எருமை எழில் ஏறு, எறி பவர் சூடி,
செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி,
திருநுதற்கு யாம் செய் குறி. 31

கடாஅவுக, பாக! தேர் கார் ஓடக் கண்டே;
கெடாஅப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல்
படாஅ மகிழ் வண்டு பாண் முரலும், கானம்
பிடாஅப் பெருந்தகை நற்கு. 32

கடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி
குடமலை ஆகத்து, கொள் அப்பு இறைக்கும்
இடம்' என ஆங்கே குறி செய்தேம், பேதை
மடமொழி எவ்வம் கெட. 33

விரி திரை வெள்ளம் வெறுப்பப் பருகி,
பெரு விறல் வானம் பெரு வரை சேரும்
கரு அணி காலம் குறித்தார், திரு அணிந்த
ஒள் நுதல் மாதர்திறத்து. 34

சென்ற நம் காதலர் சேண் இகந்தார்!' என்று எண்ணி
ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர,
வென்றி முரசின் இரங்கி, எழில் வானம்
நின்றும் இரங்கும், இவட்கு. 35

சிரல்வாய் வனப்பின ஆகி, நிரல் ஒப்ப
ஈர்ந் தண் தளவம் தகைந்தன; சீர்த்தக்க
செல்வ மழை மதர்க் கண், சில் மொழி, பேதை ஊர்
நல் விருந்து ஆக, நமக்கு. 36

கருங் கடல் மேய்ந்த கமஞ் சூழ் எழிலி
இருங் கல் இறு வரை ஏறி, உயிர்க்கும்
பெரும் பதக் காலையும் வாரார்கொல், வேந்தன்
அருந் தொழில் வாய்த்த நமர்? 37

புகர் முகம் பூழிப் புரள, உயர் நிலைய
வெஞ் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும்
தண் பதக் காலையும் வாரார்; எவன் கொலோ,-
ஒண்டொடி! - ஊடும் நிலை? 38

அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங் குரல் நொச்சிப் பசுந் தழை சூடி,
இரும் புனம் ஏர்க் கடிகொண்டார்; பெருங் கெளவை
ஆகின்று, நம் ஊர் அவர்க்கு. 39

பருவம் காட்டித் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது
'வந்தன செய் குறி; வாரார் அவர்' என்று
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி,
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்;
ஈந்தும், - மென் பேதை! - நுதல். 40

சிறப்புப் பாயிரம்
முல்லைக் கொடி மகிழ, மொய் குழலார் உள் மகிழ,
மெல்லப் புனல் பொழியும் மின் எழில் கார்; - தொல்லை நூல்
வல்லார் உளம் மகிழ, தீம் தமிழை வார்க்குமே,
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்-கைந்நிலை

புல்லங்காடனார் இயற்றிய கைந்நிலை
'கை' என்பது ஒழுக்கம் என்றும் பொருள்படும். ஐந்திணை ஒழுக்கம் பற்றியதே இந்நூலாகும். ஒவ்வொரு திணைக்கும் பன்னிரண்டு பாடலாக அறுபது பாடல்கள் இந் நூலில் உள்ளன. இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற வரிசை முறையில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. திணைமொழி ஐம்பதும் இவ் வகை வரிசை முறையிலே அமைந்திருத்தல் கவனிக்கத்தக்கது. இந் நூற் செய்யுட்களில் 18 பாடல்கள் சிதைந்துள்ளன (1, 8, 14-17, 20, 26-35, 38). இவற்றுள் மூன்று பாடல்கள் ஒரு சொல் அளவில் சிதைந்துள்ளன. ஏனைய பதினைந்தின் அடிகளும் சொற்களும் பல் வேறு வகையில் சிதைந்துள்ளன. எவ்வித சிதைவும் இன்றி உள்ளவை நெய்தல் திணைப் பகுதியில் அமைந்துள்ள பாடல்களே. இந் நூலைச் செய்தவர் மாறோக்கத்து முள்ளிநாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் என்பது நூல் இறுதிக் குறிப்பில் காணப்படுகிறது. எனவே நூலாசிரியர் பெயர் புல்லங்காடனார் என்பதும், இவர் தந்தையார் பெயர் காவிதியார் என்பதும் விளங்கும். இவர் தந்தையார் அரசனால் 'காவிதி' என்னும் சிறப்புப் பெயர் அளிக்கப் பெற்றவராக இருத்தல் கூடும். மாறோக்கம் என்பது கொற்கையைச் சூழ்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். எனவே, இவர் கொற்கையை அடுத்த முள்ளி நாட்டு நல்லூரில் வாழ்ந்தவராவார்.


1. குறிஞ்சி
வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
நுகர்தல் இவரும் கிளி கடி ஏனல்
நிகர் இல் மட மான் நெரியும் அமர் சாரல்
கானக நாடன் கலந்தான்இலன் என்று,
மேனி சிதையும், பசந்து. 1

வரைவு நீட்டித்த வழி ஆற்றாமையைத் தலைவி தோழிக்குக் கூறுதல்
வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச்
சந்தனம் ஏந்தி, அருவி கொணர்ந்திடூஉம்
வஞ்ச மலை நாடன் வாரான்கொல்? - தோழி! - என்
நெஞ்சம் நடுங்கி வரும்! 2

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
பாசிப் பசுஞ் சுனைப் பாங்கர், அழி முது நீர்
காய் சின மந்தி பயின்று, கனி சுவைக்கும்,
பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு
ஆசையின் தேம்பும், என் நெஞ்சு. 3

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
ஓங்கல் விழுப் பலவின் இன்பம் கொளீஇய
தீம் கனி மாவின் முசுப் பாய் மலை நாடன்
தான் கலந்து உள்ளாத் தகையனோ, - நேரிழாய்! -
தேம் கலந்த சொல்லின் தெளித்து? 4

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
இரசம் கொண்டு இன் தேன் இரைக்கும் குரலைப்
பிரசை இரும் பிடி பேணி வரூஉம்
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு, என் தோள்
நிரையம் எனக் கிடந்தவாறு! 5

மரையா உகளும் மரம் பயில் சோலை,
உரை சால் மட மந்தி ஓடி உகளும்
புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம்
உரையா வழங்கும், என் நெஞ்சு. 6

கல் வரை ஏறி, கடுவன், கனி வாழை
எல் உறு போழ்தின் இனிய பழம் கவுள் கொண்டு,
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை
சொல்ல, சொரியும், வளை. 7

தலைவி வேறுபாடு கண்டு வினவிய செவிலிக்குத் தோழி அறத்தோடு நிற்றல்
கருங் கைக் கத வேழம், கார்ப் பாம்புக் குப்பங்
கி . . .க் கொண் . . . . . . . . . . . . . கரும்
பெருங் கல் மலை நாடன் பேணி வரினே,
சுருங்கும், இவள் உற்ற நோய். 8

வரைவு நீட்டித்த வழி ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறுதல்
காந்தள் அரும் பகை என்று, கத வேழம்
ஏந்தல் மருப்பிடைக் கை வைத்து, இனன் நோக்கி,
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன்
காய்ந்தான்கொல், நம்கண் கலப்பு? 9

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
பொன் இணர் வேங்கைப் புனம் சூழ் மலை நாடன்,
மின்னின் அனைய வேல் ஏந்தி, இரவினுள்
இன்னே வரும்கண்டாய் - தோழி! - இடை யாமத்து
என்னை இமை பொருமாறு? 10

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி
பொறி கிளர் மஞ்ஞை புகன்று குடையும்
முறி கிளர் நல் மலை நாடன் வருமே-
அறி துறைத்து, இவ் அல்லில் நமக்கு. 11

தலைமகள், இரவுக்குறி ஏதமுடைத்து என்று அஞ்சித் தோழிக்குக் கூறுதல்
நாக நறு மலர், நாள் வேங்கைப் பூ, விரவி,
கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக,
'முடியும்கொல்?' என்று முனிவான் ஒருவன்
வடி வேல் கை ஏந்தி, வரும். 12

2. பாலை
வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்
கடுகி அதர் அலைக்கும் கல் சூழ் பதுக்கை
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும்
நெடு இடை அத்தம் செலவு உரைப்பக் கேட்டே,
வடுவிடை மெல்கின, கண். 13

வரைபொருள் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைவனுக்குத் தலைவியின் பிரிவாற்றாமை கூறல்
கத நாய் துரப்ப, .... .... .... ..... ..... ..... ....
.... .... .... .... .... ..... ..... ...... ..... யவிழும்
புதல் மாறு வெங் கானம் போக்கு உரைப்ப, நில்லா,
முதன் ..... ..... ..... .... ..... .... .... .... ..... 14

.... .... .... ..... ..... ..... ..... ..... .... ..... .... .... ....
.... .... .... ..... ..... ..... ..... ..... .... ..... .... .... ....
கடுங் கதிர் வெங் கானம் பல் பொருட்கண் சென்றார்,
கொடுங் கல் மலை .... .... .... ..... ..... ..... 15

..... ..... ...... ...வுறையும் மெல்லென் கடத்து .... ......
கடுஞ் சின வேங்கை கதழ் வேழம் சாய்க்கு
..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... ..... .....
..... ..... ..... ..... ..... ..... ..... நமர். 16

கடமா இரிந்தோடும் கல் அதர் அத்தம்,
மட மா இரும்பிடி வேழ மரு .... .... .... .... ....
..... ..... ..... ...ண்ட வுண் கண்ணுள் நீர் ..... ..... .....
..... ...... ..... ..... ..... ...... ...... ..... 17

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது
ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை,
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும்
தாம் மாண்பு இல் வெஞ் சுரம் சென்றார் வரக் கண்டு,
வாய் மாண்ட பல்லி படும். 18

பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது
அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல்,
செருக்கு இல் கடுங் களிறு சென்று உறங்கி நிற்கும்,
பரல் கானம் பல் பொருட்குச் சென்றார் வருவர்;
நுதற்கு இவர்ந்து ஏறும், ஒளி. 19

.... .... ..... ..... ..... ..... ..... .... ..... ....... ..... ....
.... .... ..... ..... ..... ..... ..... .... ..... .......விழ்க்கும்
ஓவாத வெங் கானம் சென்றார் ..... ...... ...... .....
..... ..... ..... வார் வருவார், நமர். 20

பிரிவிடை ஆற்றாத தலைவி தோழிக்குச் சொல்லியது
ஆந்தை குறுங்கலி கொள்ள, நம் ஆடவர்
காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின்,-
ஏந்தல் இள முலை ஈர் எயிற்றாய்! - என் நெஞ்சு
நீந்தும், நெடு இடைச் சென்று. 21

பிரிவிடை வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தித் தேற்றியது
கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர்
உள்ளம் பிரிந்தமை நீ அறிதி - ஒள்ளிழாய்! -
தொல்லை விடரகம் நீந்திப் பெயர்ந்து, அவர்
வல்லை நாம் காணும் வரவு. 22

'ஆற்றாள்!' எனக் கவன்ற தோழிக்கு, 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது
சிலை ஒலி வெங் கணையர், சிந்தியா நெஞ்சின்
கொலை புரி வில்லொடு கூற்றுப்போல், ஓடும்
இலை ஒலி வெங் கானத்து, இப் பருவம் சென்றார்
தொலைவு இலர்கொல் - தோழி! - நமர்? 23

ஆற்றாமையறிந்து வருந்திய தோழிக்குத் தலைவி ஆற்றுவல் என்பது தோன்றக் கூறியது
வெஞ் சுரம் தேர் ஓட வெஃகி நின்று, அத்த மாச்
சிந்தையால் நீர் என்று செத்து, தவா ஓடும்
பண்பு இல் அருஞ் சுரம் என்பவால் - ஆய்தொடி! -
நண்பு இலார் சென்ற நெறி. 24

3. முல்லை
பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது
கார் செய் புறவில் கவினிக் கொடி முல்லை
கூர் எயிறு ஈன, குருந்து அரும்ப, ஓரும்
வருவர் நம் காதலர்; - வாள் தடங் கண்ணாய்!-
பருவரல், பைதல் நோய் கொண்டு! 25

பிரிவாற்றாமையால் வருந்திய தலைவிக்குக் கார்ப்பருவம் காட்டி வருவர் எனத் தோழி வற்புறுத்தியது
குருதி மலர்த் தோன்றி கூர் முகை ஈன,
.... .... சேவல் எனப் பிடவம் ஏறி,
பொரு தீ என வெருளும்; - பொன் நேர் நிறத்தாய்! -
அரிது, அவர் வாராவிடல். 26

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... .... ..... ..... ....ர ஒல்கப் புகுதரு
கார் தரு மாலை கலந்தார் வரவு உள்ளி,
ஊர் தரும், மேனி பசப்பு. 27

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... பெய்த புறவில் கடுமான் தேர்
ஒல்லைக் கடாவார்; இவர்காணின் காதலர்;
சில் .... .... .... ..... .... ..... ..... ..... 28

.... .... .... ..... .... ..... ....... குருந்து அலர,
பீடு ஆர் இரலை பிணை தழுவ, காடு ஆர,
கார் வானம் வந்து முழங் ..... ..... ..... ..... .....
.... .... .... ..... .... ..... ..... ..... .... 29

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
கொன்றைக் கொடுங் குழல் ஊதிய கோவலர்
மன்றம் புகுதரும் போழ்து. 30

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... வானம்
வந்து துளி வழங்கக் கண்டு. 31

கார் எதிர் வானம் கதழ் எரி சி.... ......
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
..... ..... லக மெழு நெஞ்சே! செல்லாயால்,
கூர் எரி மாலைக் குறி. 32

தளை அவிழ் தே.... ..... ..... ..... ...... ...... ......
.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
உளையார் கலி நன் மாப் பூட்டி வருவார்,
களையாரோ, நீ உற்ற நோய்? 33

முல்லை எயிறு ஈன ..... .... ..... ..... ..... ....
..... .... .... ..... ........ .....ன மல்கி,
கடல் முகந்து கார் பொழிய, காதலர் வந்தாரர்
உடன் இயைந்த கெ.... ...... 34

.... .... .... ..... .... ..... ..... ..... ..... ..... ..... .....
..... .... ....ர டைப் பால் வாய் இடையர்
தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால்,
அரித .... .... ..... ..... ..... ..... 35

தோழி பருவம் காட்டி தலைவர் வருவார் என வற்புறுத்தி ஆற்றுவித்தல்
பிடவம் குருந்தொடு பிண்டி மலர,
மடவ மயில் கூவ, மந்தி மா கூர, -
தட மலர்க் கோதையாய்! - தங்கார் வருவர்,
இடபம் எனக் கொண்டு, தாம். 36

4. மருதம்
பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனை வாயிலாக விடுக்கத் தலைவி பாணனை நோக்கிக் கூறியது
கழனி உழவர் கலி அஞ்சி ஓடி,
தழென மத எருமை தண் கயம் பாயும்
பழன வயல் ஊரன் பாண! எம் முன்னர்,
பொழெனப் பொய் கூறாது, ஒழி. 37

பரத்தைமாட்டுப் பயின்று வரும் தலைமகனைப் புலந்து, தலைமகள் சொல்லியது
கயல் இனம் பாயும் கழனி நல் ஊர!
நயம் இலேம் எம் மனை இன்றொடு வாரல்;
துயில் இன் இள முலையார் தோள் நயந்து வாழ் நின்,
குயி ..... ..... ..... கொண்டு. 38

தலைவன் மகற்கொண்டு வரும் சிறப்பினைத் தோழி கண்டு மகிழ்ந்து கூறியது
முட்ட முது நீர் அடை கரை மேய்ந்து எழுந்து,
தொட்ட வரி வரால் பாயும் புனல் ஊரன்
கட்டு அலர் கண்ணிப் புதல்வனைக் கொண்டு, எம் இல்
சுட்டி அலைய வரும். 39

வாயில் வேண்டிய பாணற்குத் தோழி வாயில் மறுத்தது
தாரா இரியும் தகை வயல் ஊரனை
வாரான் எனினும், 'வரும்' என்று, சேரி
புலப்படும் சொல்லும், இப் பூங் கொடி அன்னாள்
கலப்புஅடும் கூடும்கொல் மற்று? 40

வாயிலாகிய பாணற்குத் தலைவி வாயில் மறுத்தது
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப, என் உடையை?
அஃது அன்று எனினும், அறிந்தேம் யாம் செய்தி
நெறியின், - இனிய சொல் நீர் வாய் மழலைச்
சிறுவன் எமக்கு உடைமையால். 41

நீத்த நீர் ஊரன் நிலைமையும், வண்ணமும்,
யார்க்கு உரைத்தி - பாண! - அதனால் யாம் என் செய்தும்?
கூத்தனாக் கொண்டு, குறை நீ உடையையேல்,
ஆட்டுவித்து உண்ணினும் உண். 42

போது அவிழ் தாமரைப் பூந் துறை ஊரனைத்
தாது அவிழ் கோதைத் தகை இயலார் தாம் புலப்பர்;
ஏதின்மை சொல்லி இருப்பர், பிறர் மகளிர்,
பேதைமை தம்மேலே கொண்டு. 43

வாயிலாக வந்த தோழிக்குத் தலைவி வாயில் மறுத்தது
தண் துறை ஊரன், - தட மென் பணைத் தோளாய்!-
'வண்டு ஊது கோதை வகை நாடிக்கொண்டிருந்து,
கோல வன முலையும் புல்லினான்' என்று எடுத்து,
சாலவும் தூற்றும், அலர். 44

வாயிலாக வந்த பாணனுக்குத் தலைவி வாயில் மறுத்தது
மூத்தேம், இனி; - பாண! - முன்னாயின், நாம் இளையேம்;
கார்த் தண் கலி வயல் ஊரன், கடிது, எமக்குப்
பாத்து இல் பய மொழி பண்பு பல கூறி,
நீத்தல் அறிந்திலேம், இன்று. 45

கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன்,
நயமே பல சொல்லி, நாணினன் போன்றான்;-
பயம் இல் யாழ்ப் பாண! - பழுது ஆய கூறாது,
எழு நீ போ, நீடாது மற்று. 46

அரக்கு ஆம்பல், தாமரை, அம் செங்கழுநீர்,
ஒருக்கு ஆர்ந்த வல்லி, ஒலித்து ஆரக் குத்தும்
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய், - பாண!-
இருக்க, எம் இல்லுள் வரல். 47

கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம்
மிக்க வன முலை புல்லான், பொலிவு உடைத்தா;-
தக்க யாழ்ப் பாண! - தளர் முலையாய் மூத்து அமைந்தார்
உத்தரம் வேண்டா; வரல். 48

5. நெய்தல்
நாவாய் வழங்கு நளி திரைத் தண் கடலுள்
ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறாக்குப்பை!
பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய் - பரியாது,
நோயால் நுணுகியவாறு. 49

நெடுங் கடல் தண் சேர்ப்ப! நின்னோடு உரையேன்;
ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன்;
கடுஞ் சூளின் தான் கண்டு, கானலுள் மேயும்
தடந் தாள் மட நாராய்! கேள். 50

மணி நிற நெய்தல் மலர் புரையும் கண்ணாய்!
அணி நலம் உண்டு இறந்து, (ந)ம் அருளா விட்ட
துணி முந்நீர்ச் சேர்ப்பற்குத் தூதோடு வந்த
பணி மொழிப் புள்ளே! பற. 51

அன்னையும் இல் கடிந்தாள்; யாங்கு இனி யாம் என் செய்கம்?
புன்னையங் கானலுள் புக்கு இருந்தும் நின்னை
நினையான் துறந்த நெடுங் கழிச் சேர்ப்பற்கு
உரையேனோ, பட்ட பழி? 52

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது
அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர்
நிலவு நெடுங் கானல் நீடார் துறந்தார்;
புலவு மீன் குப்பை கவரும் துறைவன்
கலவான்கொல், தோழி! நமக்கு? 53

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது
என்னையர் தந்த இற உணங்கல் யாம் கடிந்து,
புன்னையங் கானல் இருந்தேமா, பொய்த்து எம்மைச்
சொல் நலம் கூறி, நலன் உண்ட சேர்ப்பனை
என்னைகொல் யாம் காணுமாறு? 54

பாங்கி தலைவனை இயற்பழித்துழித் தலைவி இயற்பட மொழிந்தது
கொக்கு ஆர் கொடுங் கழிக் கூடு நீர்த் தண் சேர்ப்பன்
நக்காங்கு அசதி நனி ஆடி, - தக்க
பொரு கயற்கண்ணினாய்! - புல்லான் விடினே,
இரு கையும் நில்லா, வளை. 55

வரைபொருட் பிரிவு நீட்டித்த வழித் தலைவி தோழிக்குக் கூறியது
நுரை தரும் ஓதம் கடந்து, எமர் தந்த
கருங் கரை வன்மீன் கவரும் புள் ஓப்பின்,
புகர் இல்லேம் யாம் இருப்ப, பூங் கழிச் சேர்ப்பன்
நுகர்வனன், உணடான், நலம். 56

தோழி இரவுக் குறியிடம் தலைவிக்கு உணர்த்தியது
கொடு வாய்ப் புணர் அன்றில் கொய் மடல் பெண்ணைத்
தடவுக் கிளை பயிரும் - தண் கடல் சேர்ப்பன்
நிலவுக் கொடுங் கழி நீந்தி, நம் முன்றில்
புலவுத் திரை பொருத போழ்து. 57

தலைவி தோழியிடம் பிரிவாற்றாமை கூறி வருந்துதல்
சுறா எறி குப்பை சுழலும் கழியுள்,
இறா எறி ஓதம் அலற இரைக்கும்
உறாஅ நீர்ச் சேர்ப்பனை உள்ளி இருப்பின்,
பொறாஅ, என் முன்கை வளை. 58

இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி படைத்து மொழிந்தது
தாழை குருகு ஈனும் தண்ணம் துறைவனை-
மாழை மான் நோக்கின் மடமொழி! - 'நூழை
நுழையும் மட மகன் யார்கொல்?' என்று, அன்னை
புழையும் அடைத்தாள், கதவு. 59

தோழி தலைவிக்குத் தலைவன் வரைவொடு புகுந்தமை சொல்லியது; வினை முற்றி மீண்ட தலைமகன் வரவு அறியச் சொல்லியதூஉம் ஆம்.
பொன் அம் பசலையும் தீர்ந்தது; - பூங்கொடி!-
தென்னவன் கொற்கைக் குருகு இரிய, மன்னரை
ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ,
கூடல் அணைய வரவு. 60

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - களவழி நாற்பது

பொய்கையார் இயற்றிய களவழி நாற்பது
களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். இந் நூலில் உள்ள பாடல்கள் எல்லாம் களத்து என்ற சொல்லை இறுதியில் கொண்டு முடிதல் கவனிக்கத் தக்கது. போர்க்கள நிகழ்ச்சிகளைச் சிறப்பித்துள்ளமையினால் 'களவழி' என்றும், பாடல் தொகை அளவினால் 'களவழி நாற்பது' என்றும், இந் நூல் வழங்கலாயிற்று. இந் நூற் பாடல்களில் நாலடி அளவியல் வெண்பாக்களும் (22), பஃறொடை வெண்பாக்களும்(19) காணப்படுகின்றன. ஐந்து செய்யுட்களைத் தவிர ஏனையவெல்லாம் 'அட்ட களத்து' என்று முடிகின்றன. மூன்று செய்யுட்கள் (15, 21, 29), 'பொருத களத்து' என்றும், ஒரு செய்யுள் (40), 'கணைமாரி பெய்த களத்து' என்றும், மற்றொரு செய்யுள் (35), 'அரசுஉவா வீழ்ந்த களத்து' என்றும் முடிவு பெற்றுள்ளன. யானை, குதிரை, தேர், தானை, என்ற நால்வகைப் படைப் போரும் குறிக்கப்படினும், யானைப் போரைப் பற்றிய செய்யுட்களே மிகுதியாய் உள்ளன. களவழி நாற்பது பாடியவர் பொய்கையார் என்பவராவர்.


நாள் ஞாயிறு உற்ற செருவிற்கு வீழ்ந்தவர்
வாள் மாய் குருதி களிறு உழக்க, தாள் மாய்ந்து,
முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி, பிற்பகல்
துப்புத் துகளின் கெழூஉம் - புனல் நாடன்
தப்பியார் அட்ட களத்து. 1

ஞாட்பினுள் எஞ்சிய ஞாலம் சேர் யானைக் கீழ்ப்
போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி,
கார்ப்பெயல் பெய்த பின், செங் குளக் கோட்டுக் கீழ்
நீர்த் தூம்பு நீர் உமிழ்வ போன்ற - புனல் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து. 2

ஒழுக்கும் குருதி உழக்கித் தளர்வார்,
இழுக்கும் களிற்றுக் கோடு ஊன்றி எழுவர்-
மழைக் குரல் மா முரசின், மல்கு நீர் நாடன்
பிழைத்தாரை அட்ட களத்து. 3

உருவக் கடுந் தேர் முருக்கி, மற்று அத் தேர்ப்
பருதி சுமந்து எழுந்த யானை, இரு விசும்பில்
செல் சுடர் சேர்ந்த மலை போன்ற - செங் கண் மால்
புல்லாரை அட்ட களத்து. 4

தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம்
குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,
குக்கில் புறத்த; சிரல் வாய - செங் கண் மால்
தப்பியார் அட்ட களத்து. 5

நால் நால் - திசையும் பிணம் பிறங்க, யானை
அடுக்குபு பெற்றிக் கிடந்த - இடித்து உரறி,
அம் கண் விசும்பின் உரும் எறிந்து, எங்கும்
பெரு மலை தூவ எறிந்தற்றே; அரு மணிப் பூண்
ஏந்து எழில் மார்பின், இயல் திண் தேர், செம்பியன்
வேந்தரை அட்ட களத்து. 6

அஞ்சனக் குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி,
இங்குலிகக் குன்றேபோல் தோன்றுமே - செங் கண்
வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன்
பொருநரை அட்ட களத்து. 7

யானைமேல் யானை நெரிதர, ஆனாது
கண் நேர் கடுங் கணை மெய்ம் மாய்ப்ப, எவ்வாயும்
எண்ண அருங் குன்றில் குரீஇஇனம் போன்றவே-
பண் ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து. 8

மேலோரைக் கீழோர் குறுகிக் குறைத்திட்ட
கால் ஆசோடு அற்ற கழற் கால், இருங்கடலுள்
நீலச் சுறாப் பிறழ்வ போன்ற - புனல் நாடன்
நேராரை அட்ட களத்து. 9

பல் கணை எவ் வாயும் பாய்தலின் செல்கலாது
ஒல்கி, உயங்கும் களிறு எல்லாம், தொல் சிறப்பின்
செவ்வல் அம் குன்றம்போல் தோன்றும் - புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து. 10

கழுமிய ஞாட்பினுள் மைந்து இகந்தார் இட்ட
ஒழி முரசம் ஒண் குருதி ஆடி, தொழில் மடிந்து,
கண் காணா யானை உதைப்ப, இழுமென
மங்குல் மழையின் அதிரும் - அதிராப் போர்ச்
செங் கண் மால் அட்ட களத்து. 11

ஓவாக் கணை பாய ஒல்கி, எழில் வேழம்
தீவாய்க் குருதி இழிதலால், செந் தலைப்
பூவல்அம் குன்றம் புயற்கு ஏற்ற போன்றவே-
காவிரி நாடன் கடாஅய், கடிது ஆகக்
கூடாரை அட்ட களத்து. 12

நிரை கதிர் நீள் எஃகம் நீட்டி, வயவர்
வரை புரை யானைக் கை நூற, வரை மேல்
உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின்
சேய் பொருது அட்ட களத்து. 13

கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க,
பவளம் சொரிதரு பை போல், திவள் ஒளிய
ஒண் செங் குருதி உமிழும் - புனல் நாடன்
கொங்கரை அட்ட களத்து. 14

கொல் யானை பாய, குடை முருக்கி, எவ்வாயும்
புக்க வாய் எல்லாம் பிணம் பிறங்க, தச்சன்
வினை படு பள்ளியின் தோன்றுமே - செங் கண்
சின மால் பொருத களத்து. 15

பரும இன மாக் கடவி, தெரி மறவர்
ஊக்கி, எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சாக்
குஞ்சரக் கும்பத்துப் பாய்வன, குன்று இவரும்
வேங்கை இரும் புலி போன்ற - புனல் நாடன்
வேந்தரை அட்ட களத்து. 16

ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி,
தாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி
கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே-
போர்க் கொடித் தானை, பொரு புனல் நீர் நாடன்
ஆர்த்து அமர் அட்ட களத்து. 17

நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும்
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் - தெளிந்து
தடற்று இலங்கு ஒள் வாள், தளை அவிழ் தார், சேஎய்
உடற்றியார் அட்ட களத்து. 18

இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி,
கடைமணி காண்வரத் தோன்றி, நடை மெலிந்து,
முக் கோட்ட போன்ற, களிறு எல்லாம் - நீர் நாடன்
புக்கு அமர் அட்ட களத்து. 19

இரு சிறகர் ஈர்க்கும் பரப்பி, எருவை
குருதி பிணம் கவரும் தோற்றம், அதிர்வு இலாச்
சீர் முழாப் பண் அமைப்பான் போன்ற - புனல் நாடன்
நேராரை அட்ட களத்து. 20

இணை வேல் எழில் மார்வத்து இங்க, புண் கூர்ந்து,
கணை அலைக்கு ஒல்கிய யானை, துணை இலவாய்,
தொல் வலியின் தீரா, துளங்கினவாய், மெல்ல
நிலம் கால் கவவு மலை போன்ற - செங் கண்
சின மால் பொருத களத்து. 21

இரு நிலம் சேர்ந்த குடைக் கீழ், வரி நுதல்
ஆடு இயல் யானைத் தடக் கை ஒளிறு வாள்
ஓடா மறவர் துணிப்ப, துணிந்தவை
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே-
கூடாரை அட்ட களத்து. 22

எற்றி வயவர் எறிய, நுதல் பிளந்து
நெய்த் தோர்ப் புனலுள் நிவந்த களிற்று உடம்பு,
செக்கர் கொள் வானில் கருங் கொண்மூப் போன்றவே-
கொற்ற வேல் தானை, கொடித் திண் தேர், செம்பியன்
செற்றாரை அட்ட களத்து. 23

திண் தோள் மறவர் எறிய, திசைதோறும்
பைந் தலை பாரில் புரள்பவை, நன்கு எனைத்தும்
பெண்ணைஅம் தோட்டம் பெரு வளி புக்கற்றே-
கண் ஆர் கமழ் தெரியல், காவிரி, நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து. 24

மலை கலங்கப் பாயும் மலை போல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாய, கொடி எழுந்து, பொங்குபு
வானம் துடைப்பன போன்ற - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து. 25

எவ் வாயும் ஓடி, வயவர் துணித்திட்ட
கை வாயில் கொண்டு எழுந்த செஞ் செவிப் புன் சேவல்
ஐ வாய் வய நாகம் கவ்வி விசும்பு இவரும்
செவ் வாய் உவணத்தின் தோன்றும் - புனல் நாடன்
தெவ்வாரை அட்ட களத்து. 26

செஞ் சேற்றுள் செல் யானை சீறி மிதித்தலால்,
ஒண் செங் குருதி தொகுபு ஈண்டி நின்றவை,
பூ நீர் வியல் மிடாப் போன்ற - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து. 27

ஓடா மறவர் உருத்து, மதம் செருக்கி,
பீடுடை வாளர் பிணங்கிய ஞாட்பினுள்,
கேடகத்தோடு அற்ற தடக் கை கொண்டு ஓடி,
இகலன் வாய்த் துற்றிய தோற்றம், அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோன்றும் - புனல் நாடன்
நண்ணாரை அட்ட களத்து. 28

கடி காவில் காற்று உற்று எறிய, வெடி பட்டு,
வீற்று வீற்று ஓடும் மயல் இனம்போல், நால் திசையும்
கேளிர் இழந்தார் அலமருப - செங் கண்
சின மால் பொருத களத்து. 29

மடங்க எறிந்து மலை உருட்டும் நீர்போல்,
தடங் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும்-
மடங்கா மற மொய்ம்பின், செங் கண், சின மால்
அடங்காரை அட்ட களத்து. 30

ஓடா மறவர் எறிய, நுதல் பிளந்த
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னுக் கொடியின் மிளிரும் - புனல் நாடன்
ஒன்னாரை அட்ட களத்து. 31

மை இல் மா மேனி நிலம் என்னும் நல்லவள்
செய்யது போர்த்தாள்போல் செவ்வந்தாள் - பொய் தீர்ந்த
பூந் தார், முரசின், பொரு புனல், நீர் நாடன்
காய்ந்தாரை அட்ட களத்து. 32

பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம்,
நெய்தல் இடை இடை வாளை பிறழ்வனபோல்
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே-
கொய் சுவல் மாவின், கொடித் திண் தேர், செம்பியன்
தெவ்வரை அட்ட களத்து. 33

இடரிய ஞாட்பினுள் ஏற்று எழுந்த மைந்தர்
சுடர் இலங்கு எஃகம் எறிய, சோர்ந்து உக்க
குடர் கொடு வாங்கும் குறு நரி, கந்தில்
தொடரொடு கோள் நாய் புரையும் - அடர் பைம் பூண்
சேய் பொருது அட்ட களத்து. 34

செவ் வரைச் சென்னி அரிமானோடு அவ் வரை
ஒல்கி உருமிற்கு உடைந்தற்றால் - மல்கிக்
கரை கொன்று இழிதரும் காவிரி நாடன்
உரை சால் உடம்பிடி மூழ்க, அரசோடு
அரசுஉவா வீழ்ந்த களத்து. 35

ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே,-
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள்,
மா உதைப்ப, மாற்றார் குடை எலாம் கீழ் மேலாய்,
ஆ உதை காளாம்பி போன்ற, - புனல் நாடன்
மேவாரை அட்ட களத்து. 36

அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பெளவம் புணர் அம்பி போன்ற - புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து. 37

பருமப் பணை எருத்தின் பல் யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும் - செரு மொய்ம்பின்,
பொன் ஆர மார்பின், புனை கழற் கால், செம்பியன்
துன்னாரை அட்ட களத்து. 38

மைந்து கால் யாத்து மயங்கிய ஞாட்பினுள்,
புய்ந்து கால் போகிப் புலால் முகந்த வெண்குடை
பஞ்சி பெய் தாலமே போன்ற - புனல் நாடன்
வஞ்சிக்கோ அட்ட களத்து. 39

வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல்,
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த - பல் வேல்,
பணை முழங்கு போர்த் தானைச் செங் கண் சின மால்
கணை மாரி பெய்த களத்து. 40

வேல் நிறத்து இங்க, வயவரால் ஏறுண்டு
கால் நிலை கொள்ளாக் கலங்கி, செவி சாய்த்து,
மா, நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே-
பாடு ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
கூடாரை அட்ட களத்து. 41

மிகைப் பாடல்
படைப்பொலி தார் மன்னர் பரூஉக் குடர் மாந்திக்
குடைப் புறத்துத் துஞ்சும் இகலன், இடைப் பொலிந்த
திங்களில் தோன்றும் முயல்போலும் - செம்பியன்
செங் கண் சிவந்த களத்து.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்