Saturday, October 27, 2007

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்- முதுமொழிக் காஞ்சி

மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய முதுமொழிக் காஞ்சி
முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பல மணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோத்த நூல் முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது எனச் சிலர் கூறுவர். இந் நூலை இயற்றியவர் மதுரைக் கூடலூர் கிழார். கூடலூர் இவர் பிறந்த ஊராயும், மதுரை பின்பு புகுந்து வாழ்ந்த ஊராயும் இருத்தல் கூடும். கிழார் என்னும் குறிப்பினால் இவரை வேளாண் மரபினர் என்று கொள்ளலாம். சங்க நூல்களில் குறிக்கப்பெறும் கூடலூர் கிழாரும் இவரும் ஒருவர் அல்லர். சங்கப் புலவர் 'புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்' என்று குறிக்கப் பெறுகிறார். இவ் இருவரையும் குறிக்கும் அடைமொழி வேறுபாடே இருவரும் வேறு வேறு புலவர் என்பதைப் புலப்படுத்தும். மேலும், முதுமொழிக் காஞ்சியில் வரும் விழைச்சு, சொன்மலை, மீப்பு முதலிய பிற்காலச் சொல்லாட்சிகளும் இவர் சங்க புலவர் காலத்திற்குப் பிற்பட்டவர் என்பதைத் தெளிவுபடுத்தும். இந் நூலுள் பத்துப் பத்துக்களும் ஒவ்வொரு பத்திலும் பத்து முதுமொழிகளும் உள்ளன. ஒவ்வொரு செய்யுளின் முதல் அடியும், 'ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்' என்றே தொடங்குகின்றமையால் இந் நூல் நூறு குறள் வெண் செந்துறையாலானது எனலாம். எல்லா அடிகளிலும் பயின்று வரும் சொற் குறிப்பைக் கொண்டு, ஒவ்வொன்றும் சிறந்த பத்து, அறிவுப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது.


1. சிறந்த பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. ஓதலின் சிறந்தன்று, ஒழுக்கம் உடைமை.
2. காதலின் சிறந்தன்று, கண் அஞ்சப்படுதல்.
3. மேதையின் சிறந்தன்று, கற்றது மறவாமை.
4. வண்மையின் சிறந்தன்று, வாய்மை உடைமை.
5. இளமையின் சிறந்தன்று, மெய் பிணி இன்மை.
6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
9. செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று.
10. முன் பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.

2. அறிவுப்பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. பேர் இல் பிறந்தமை ஈரத்தின் அறிப.
2. ஈரம் உடைமை ஈகையின் அறிப.
3. சோரா நல் நட்பு உதவியின் அறிப.
4. கற்றது உடைமை காட்சியின் அறிப.
5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப.
6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.
7. குத்திரம் செய்தலின், கள்வன் ஆதல் அறிப.
8. சொற்சோர்வு உடைமையின், எச் சோர்வும் அறிப.
9. அறிவு சோர்வு உடைமையின், பிறிது சோர்வும் அறிப.
10. சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.

3. பழியாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. யாப்பு இலோரை இயல்பு குணம் பழியார்.
2. மீப்பு இலோரை மீக் குணம் பழியார்.
3. பெருமை உடையதன் அருமை பழியார்.
4. அருமை உடையதன் பெருமை பழியார்.
5. நிறையச் செய்யாக் குறை வினை பழியார்.
6. முறை இல் அரசர் நாட்டு இருந்து பழியார்.
7. செயத்தக்க நற் கேளிர் செய்யாமை பழியார்.
8. அறியாத தேசத்து, ஆசாரம் பழியார்.
9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.
10. சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.

4. துவ்வாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது.
2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.
3. நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
4. பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது.
5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.
6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.
7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.
8. அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.
9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.
10. தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது.

5. அல்ல பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
2. தராம் மாணாதது வாழ்க்கை அன்று.
3. ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று.
4. சோரக் கையன் சொல்மலை அல்லன்.
5. நேரா நெஞ்சத்தோன் நட்டோ ன் அல்லன்.
6. நேராமல் கற்றது கல்வி அன்று.
7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.
8. அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று.
9. திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று.
10. மறு பிறப்பு அறியாதது மூப்பு அன்று.

6. இல்லை பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. மக்கட் பேற்றின் பெறும் பேறு இல்லை.
2. ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை.
3. வாய்ப்புடை விழைச்சின் நல்விழைச்சு இல்லை.
4. வாயா விழைச்சின் தீ விழைச்சு இல்லை.
5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை.
6. உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை.
7. நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை.
8. இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை.
9. இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை.
10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை.

7. பொய்ப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய்.
2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய்.
3. கள் உண்போன் சோர்வு இன்மை பொய்.
4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.
5. மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய்.
6. உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்.
7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.
8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.
9. பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்.
10. வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய்.

8. எளிய பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. புகழ் வெய்யோர்க்குப் புத்தேள் நாடு எளிது.
2. உறழ் வெய்யோர்க்கு உறு செரு எளிது.
3. ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது.
4. குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது.
5. துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.
6. இன்பம் வெய்யோர்க்கு துன்பம் எளிது.
7. உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது.
8. பெண்டிர் வெய்யோர்க்குப் படு பழி எளிது.
9. பாரம் வெய்யோர்க்குப் பாத்தூண் எளிது.
10. சார்பு இலோர்க்கு உறு கொலை எளிது.

9. நல்கூர்ந்த பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று.
2. மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று.
3. செற்று உடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்தன்று.
4. பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று.
5. தற் போற்றாவழிப் புலவி நல்கூர்ந்தன்று.
6. முதிர்வு உடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று.
7. சொல் செல்லாவழிச் சொலவு நல்கூர்ந்தன்று.
8. அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று.
9. உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று.
10. நட்பு இல்வழிச் சேறல் நல்கூர்ந்தன்று.

10. தண்டாப் பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான்.
2. வீங்கல் வேண்டுவோன் பல புகழ் தண்டான்.
3. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்.
4. நிற்றல் வேண்டுவோன் தவம் செயல் தண்டான்.
5. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்.
6. மிகுதி வேண்டுவோன் தகுதி தண்டான்.
7. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்.
8. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்.
9. ஏமம் வேண்டுவோன் முறை செயல் தண்டான்.
10. காமம் வேண்டுவோன் குறிப்புச் செயல் தண்டான்.

No comments: